Monday, January 29, 2024

பருவ இறுதியில் நிறைவுக்கு வரவுள்ள லிவர்பூல் அணியில் ஜூர்கன் க்ளோப்பின் சாதனைப் பயணம்


பிபா கழக உலக கிண்ணத்துடன்  க்ளோப்

"நீங்கள் ஒருபோதும் தனியாக நடந்து செல்லமாட்டீர்கள் " இது தான் லிவர்பூல் கால்பந்தாட்ட அணியின் உத்தியோகபூர்வமற்ற தேசிய கீதம். அண்மையில் இடம்பெற்ற லிவர்பூல் மற்றும் நார்விச் சிட்டி இடையிலான  எப்ஏ கோகிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்போது லிவர்புல் ஆதரவாளர்களால் பாடப்பட்ட காணொளி தான் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



க்ளோப் இந்தப் பருவத்துடன் தான் லிவர்பூல் அணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த பின்னர் இடம்பெற்ற முதல் போட்டியில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

ஐரோப்பிய கால்பந்தாட்ட வரலாற்றில் லிவர்பூல் அணிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. என்ன தான் சிறந்த வரலாற்றை கொண்டிருந்தாலும் 2004 ம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பிய கிண்ணத்தையோ 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிலும் பிரிமியர் லீக் எனும் பெயரில் இங்கிலாந்து கழக போட்டிகள் பெயர் மாற்றப்பட்ட பின்னர்  ஒருமுறை கூட அதனை வெல்லாத வெறுமனே வரலாற்றை பேசி திரியும் அணி என்ற பெயர் மட்டுமே க்ளோப் வரும்வரை லிவர்பூலுக்கு இருந்தது.

இறுதியாக 1990 ல் இங்கிலாந்து லீக் கிண்ணத்தை வென்றபின்னர் அவர்களின் 19வதுகிண்ணத்துக்கு  25 வருடங்களாக  காத்திருப்பு  நீடித்த நிலையில் 2015 இல் க்ளோப் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்,"நான்கு ஆண்டுகளில் நான் இங்குஇருந்தால் , எங்களுக்கு ஒரு பட்டம் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று க்ளோப் கூறினார்.

வெறுமனே அவர் அதனை சொல்லாக கூறவில்லை தனது முதல் பருவத்தில் இங்கிலாந்து லீக் கிண்ணம் மற்றும் யுரோப்பா கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு அவரால் லிவர் பூல் அணியை கொண்டு செல்ல முடிந்த்து ஆயினும் துரதிஸ்டவசமாக அவை எதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒரு தடவை மாத்திரம் ஐரோப்பிய கிண்ணத்துக்கு 32 அணிகளில் ஒரு அணியாக தகுதி பெற முடிந்த கேவலமான நிலையில் இருந்த லிவர் பூலை அதற்கு அடுத்த வருடமே பிரிமியர் லீக்கில் 4 வது இடத்தை பெறச் செய்து ஐரோப்பிய கிண்ணத்துக்கு கொண்டு சென்றதுடன் அந்த வருடம் இறுதிப் போட்டி வரை அணி முன்னேறி இருந்தது.


தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக அதற்கு அடுத்த வருடம் லிவர்பூல் அணி 14 வருடங்களுக்கு பின்னர் ஐரோப்பிய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அதே வருடம் வெறும் ஒரு புள்ளியால் பிரிமியர் லீக் லிவர்பூல் கையை விட்டு போனது .

இந்த நிலையில் அதற்கு அடுத்த வருடமே  சுமார் 18 புள்ளிகள் வித்தியாசத்துடன் இங்கிலாந்தின் பிரிமியர் லீக் சம்பியனாக லிவர்பூல் தெரிவாகியது.

தொடர்ச்சியாக இந்தக் கிண்ணங்கள் வெல்லப்பட்ட போது  க்ளோப் வெறுமனே முக்கிய கிண்ணங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் இங்கிலாந்தின் எப்ஏ கிண்ணம் மற்றும் லீக் கிண்ணங்களில் அவரால் வெற்றி பெற முயல்வதில்லை என்ற விமர்சனம் அவர் மேல் முன் வைக்கப்பட்டது.

2021-22 பருவ காலம் இதற்கு பதில் சொன்னது அதில் இங்கிலாந்தில் க்ளோப்பால் வெல்லப்படாத ஏனைய இரு கிண்ணங்களும் லிவர்பூல் வசமானதுடன் ஐரோப்பிய கிண்ணம், பிரிமியர் லீக் இரண்டிலும் இரண்டாவது இடத்தை லிவர் பூல் பெற்றுக் கொண்டது.



இவ்வருடமும் பிரிமியர் லீக்கில் பாதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் லிவர் பூல் முதல் நிலையை வகிப்பதுடன் ஈஎப்ல் கிண்ண இறுதி ஆட்டத்துக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2023/24  பருவ  முடிவில் லிவர்பூலை விட்டு வெளியேறும் தனது அதிர்ச்சி முடிவை ஜூர்கன் க்ளோப் அறிவித்துள்ளார். ஒப்பந்த காலத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் தனது சக்தி குறைவடைந்து விட்டது எனவே இந்த பருவத்துடன் தான் விலகி செல்வதாக கூறி இருக்கிறார்