Sunday, July 26, 2015

தமிழ் சிங்கள இனவாத அரசியலுக்கு மத்தியில் தேர்தலில் குறைந்தளவு ஆசனங்களையாவது உரிமையுடன் பெறத்தக்க இரு தரப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும் அரசியலுக்கும் மகிந்த ராஜபக்ஸ விமல் வீரவன்ச செய்யும் அரசியலும் சமாந்தரமாக செல்லும் செல்லும் இரண்டு கோடுகள் போன்றவை. இரண்டு கோடுகளும் முழுமையாக தங்கியுள்ளது அவர்களது இனத்தினை கவருவதற்காக மேற்கொள்ளும் பசப்பு பிரசாரங்களில் தான்.



மீண்டும் புலிகள் வரப்போகிறார்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது மேலைத்தேய சக்திகள் எம்மை அடிபணிய செய்யப் போகிறார்கள் இவற்றில் இருந்து பாதுகாக்க எம்மை ஆதரிக்க வேண்டும்  இவையெல்லாம் மகிந்தவின் அரசியல் என்றால் இராணுவமும் அரசும் எம்மை தொடர்ந்து ஒடுக்குகின்றன எமது மக்களுக்கு விடிவு இல்லை இதை சர்வதேசத்திடம் கொண்டு சென்று தீர்வினை பெற எமக்கு பலத்தினை தாருங்கள் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூப்பாடாக இருக்கிறது.

நாட்டில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அது பற்றி சிந்திக்கும் நிலையே இலங்கையில் உள்ள எந்தவொரு தமிழ் மகனிடமும் தற்போது இல்லை. தம்முடைய பொருளாதார நிலையை உயர்த்தவும் தம் எதிர்கால சந்ததியை சிறப்பாக கொண்டு செல்லவும் மட்டும் சிந்திக்கும் சமூகத்தில் இருந்து   ஒரு போதும் மீண்டும் ஒருமுறை புலிகள் என்னும் இயக்கம் தலையெடுக்கும் நிலை தோன்றப்போவதில்லை. அதே போன்று பெரும்பான்மை இன மக்களின் விரூப்பம் அங்கீகாரம் என்பன இன்றி 100% தமிழ் மக்களின் அதரவு இருந்தால் கூட எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பது பல தருனங்களிலும் உணரப்பட்ட வெளிப்படை உண்மை. சமஸ்டி எனும் பெயரிலோ  அல்லது வேறு எவ்வழியிலும் கூட்டமைப்பினால் ஒரு துண்டு நிலத்தினை கூட பெற முடியாது.  தமக்கு எதாவது பெரிய நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில்  இலங்கையை திரும்பி பார்க்கவே சர்வதேச நாடுகள் விரும்பமாட்ட எனவே இந்நிலையில் அரசு மீதான அழுத்தம் அவர்களுக்கு பயனற்ற ஒன்றாகும்.

மீண்டும் புலிகள் வந்தால் என்ன செய்வது என்ற பயம் இன்னமும் காணப்படும் சிங்கள மக்களுக்கும் புலிகளுக்கு பிறகு தமக்குரிய ஒரே பலம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என நம்பும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த விதமான வேறுபாடும் இல்லை.

மகிந்தவின் கடந்த ஆட்சி காலத்தில் நாட்டில் உண்மையாக இயங்கிய எதிர்க்கட்சி என்று சொன்னால் அந்தப் பெருமை முற்றுமுழுதாக  மக்கள் விடுதலை முன்னணியினரேயே சாரும். தான் விரும்பிய எந்தவொரு ஐ.தே.க உறுப்பினரையும் தம் பக்கம் இணைக்க முடியும் தமக்கு நல்ல பலாபலன்களை பெற்றுத் தரக்கூடியதாக அதன் தலைவருடைய  பதவியினையே பாதுகாத்து கொடுக்க முடியும் என்ற சூழலில் ஒரு முமுமையான எதிர்கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி அப்போது செயற்பட்டிருந்தது. 

விமல் வீரவன்ச உட்பட ஏனைய கடும்போக்கு நபர்களுடைய வெளியேற்றத்தினை தொடர்ந்து சிங்களவர்கள் மட்டுமல்லாது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தரப்பினராக மக்கள் விடுதலை முன்னணி மாறியிருந்தது. அந்த வகையில் இந்த தேர்தலில் குறைந்தது பத்து ஆசனங்களையாவது பெறுவதற்கு உரித்துடைய ஒரு தரப்பினராக அவர்கள் விளங்குகிறார்கள்.

அதே போன்று இரண்டு தேசம் என்ற அர்த்தமற்ற கொள்கையை கொண்டு இருப்பினும்  மகிந்தவின் ஆட்சியிலும்  கூட  பல வித அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மீள்குடியேற்றம் காணாமல் போனோர் தொடர்பில்  போராட்டங்களை மேற்கொண்ட தமிழ் தேசிய முன்னணியினர் இரண்டு ஆசனங்களை பெறுவதற்கு  தகுதியானவர்கள்.




No comments:

Post a Comment