Monday, August 10, 2015

கடந்த கால வரலாறும் மற்றுமொரு ஏமாற்றத்துக்கு தயாராகும் வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்களும்


இலங்கையில் இதுவரை காலமும் இடம்பெற்று வந்த பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தல் சற்று முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு பிரதான காரணமாக அமையும் ஒன்று என்றால் அதுதான் மகிந்தவின் மீள் முயற்சி. தமிழர்களை தோற்கடித்து தமது நாட்டினை மீட்டுத்தந்த தலைவனை மீள அரியாசனத்தில்  ஏற்றுவதா இல்லையா என்பதே சிங்கள மக்களிடம் உள்ள கேள்வி. அது எமக்கு தேவையற்றது  அதை அவர்களே தீர்மானிக்கட்டும்.

 பாராளுமன்ற தேர்தலில் எம்முடைய தமிழ் மக்கள் வழமையாக எதனை செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமானால் கடந்த கால வரலாறு அவசியம்.  அதிலும் விடுதலை புலிகளின் தோற்றத்துக்கு பின்னரான தேர்தல்கள் இங்கு முக்கியம் பெறுகிறது (இலங்கையின் விகிதாசார முறைமையின் பிரகாரமான முதல் தேர்தல் 1989 இல் இடம்பெற்றது) விடுதலை புலிகள் முற்றாக அழிக்கப்படும் வரை  வடகிழக்கில் இடம்பெற்ற அனைத்து  தேர்தலிலும்  அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது. அது எவ்வாறு என பார்ப்போம்.

1989 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம்பெறும் அனைத்து கட்சிகளும் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட விடுதலை புலிகளின் ஆதவுடன் ஈரோஸ்(ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்) இவர்களுக்கு எதிராக போட்டியிட்டது) இதில் EROS 13 ஆசனங்களை பெற்றுக்கொள்ள தமிழர் விடுதலை கூட்டணியால் 10 ஆசனங்களே பெற முடிந்தது .










1994 , 2000 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலில் விடுதலை புலிகளின் ஆதரவு எவருக்கும் இல்லாத நிலையில் மிகக் குறைவான மக்களே வாக்களிப்பில் பங்கு பற்றினர். 1994 தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வெறும் 10744 வாக்குகளுடன் EPDP 9 ஆசனங்களை பெற்றது. ஏனைய தமிழ் தரப்பினர் 8 ஆசனங்களை பெற்றுக்கொண்டனர்.















2000 ம் ஆண்டு தேர்தலிலும் இதேபோன்றதொரு நிலைமையே காணப்பட்டது தமிழ் வாக்குகள் பல பாகங்களாக பிரிந்தன. தமிழ் மக்களின் தனித்துவ பிரநிதிதி என்னும் பெயர் எவருக்கும் கிடைக்கவில்லை.
















இந்நிலையில் விடுதலை புலிகளுடனான போர்நிறுத்தம் கைச்சாத்திட்ட நிலையில் 2001 ம் ஆண்டு தேர்தலில் தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டன. இதில் புலிகளின் வெளிப்படையான ஆதரவு கிடைக்கா விடினும் இந்த கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு அவர்களே முன்னின்று செயற்பட்டனர் அந்த வகையில் 15 ஆசனங்களை பெறமுடிந்தது.












2004 இல் இடம்பெற்ற தேர்தல் தமிழ் மக்களை பொறுத்த வரை மிக முக்கியமானது விடுதலை புலிகள் தமது பிரதிநிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பினை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்களின் முழு ஆதரவுடன் 22 உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்டார்கள்












2010 ம் ஆண்டு தேர்தல் விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் முதன் முதலாக இடம்பெற்ற தேர்தலாகும் விடுதலை புலிகளின் அழிவுடன் மிக குறைந்த கால இட வெளியில் இடம்பெற்ற தேர்தல் என்ற வகையில் ஏற்கனவே அவர்கள் ஆதரித்த தமிழ் தேசிய கூட்டணிக்கு மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமது வாக்குகளை அளித்தார்கள் வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்த போதும் புலிகளின் பெயரே சொல்லி 14 உறுப்பினர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொண்டது










கடந்த கால நிலைமையே இதுவாகும் . இம்முறை தேர்தல் சற்று வித்தியாசமானது புலிகள் அழிக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் வாக்கு கேட்டு மக்களிடம் வந்துள்ளார்கள். புலிகளின் தோல்வியுடன் சாத்தியப்படாத சமஸ்டி, இரு தேசம் ஒரு நாடு  ஆகிய வெற்று கோட்பாடுகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய முன்னணியும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இதுவரை  தாம் மக்களுக்கு செய்த சேவைகளை முன்வைத்து ஈ.பி.டி.பி, ஐ.தே.க, ஐ.ம.சு.மு என்பனவும் ஏனைய  தரப்பாக போட்டி இடுகிறார்கள். 

இங்கு  தம்முடைய சேவைகளை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் அரசியல் ஓரளவுக்கு  ஏற்றுக் கொள்ளத்தக்கது. இதுவரை இவ்வளவு செய்திருக்கிறோம் இனி இதை செய்வோம் என அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். அனால் தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் தேசிய முன்னணியோ தமிழ் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் நிலையிலேயே  இருக்கிறார்கள். இரண்டு தரப்பினரும் மற்ற தரப்பினரே குற்றம் சாட்டி அவர்களுக்கு வாக்களிக்காது தமக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார்களே தவிர அடுத்த அரசில் எமது மக்களுக்கு அவர்களால் பெற்றுத்தரக் கூடிய எதையாவது முன்வைத்து வாக்கு கேட்பதாக இல்லை.  இன்று சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்படும் அரசியல் கருத்து  வீடா அல்லது சைக்கிளா சிறந்தது என்பதாகும்.  இரு தரப்பும் மற்றைய தரப்பின் குறைகளை பட்டியலிடும் அதேவேளை தமது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது தொடர்பில் சரியான கருத்துக்களை முன் வைக்க வில்லை.  

எனவே இவற்றை எடுத்து நோக்கும் போது தமிழ் மக்களின் தலை விதி மாறப்போவதாக தெரியவில்லை. தமக்கு கிடைக்கக்கூடிய விடயங்களுடன் திருப்தி அடைந்து தமது வாழ்க்கை தரத்தையும் பொருளாதரத்தையும் ஏனைய சமூகங்கள் அபிவிருத்தி செய்து கொண்டு செல்ல சமஸ்டி தனி தேசம் என கூப்பாடு போட்டு எமது அரசியல் கட்சிகள் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற போகின்றன  விரும்பியோ விரும்பாமலோ இதே  அரசியல் வாதிகளை  தெரிவு செய்வதை தவிர  வேறு தெரிவு தமிழ் மக்களுக்கு இருக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment