Wednesday, May 25, 2016

சம்பூர் சம்பவத்தின் பின்னணியில் அடுத்தது என்ன ?

மீண்டுமொருமுறை சம்பூர் இலங்கையில் அதிகம் உச்சரிக்கப்படும் பேராக மாறியுள்ளது. அனால் இம்முறை அங்கு முக்கியத்துவம் பெறுவது அனல் மின் நிலையமோ அல்லது  மக்களின் மீள் குடியேற்றமோ அல்ல. பொது இடமொன்றில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டினால் கடற்படை அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வசை பிரயோகமே ஊடகங்களினால் பாரிய பிரச்சினை ஒன்றாக காட்டப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப்பெருக்கு பாதிப்பு தொடர்பிலான விடயங்கள் இன்னமும் ஓய்வதற்கு முன்னம் இந்த விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்ட பின்னர் சம்பூர் கடற்படையினரின் அதி உயர் பாதுகாப்புக்கு மத்தியில் காணப்படும் ஒரு இடமாகும் இதனுடைய பூகோள அமைவிடம் இந்நிலைமைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு அனல் மின்நிலையம் ஒன்றனை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருவதுடன் பொதுமக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக மீள  கையளிக்கப்படவில்லை. மேலும் கடந்த பெப்ரவரி மாதம்  பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 20 ம் திகதி சம்பூர் மகாவித்திலாயயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து கிழக்கு மாகண முதலமைச்சர் நசீட் அகமட், சம்பூர் விதுர கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை மேடையில் வைத்து கடுமையாக திட்டிய காட்சிகள் ஊடகங்களில் காட்டப்பட்டன மேலும் அழைக்கப்படாத நிகழ்வு ஒன்றுக்கு சென்று இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிங்கள இனவாத ஊடகங்கள் சிலவற்றால் அவரை கைது செய்யவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இனிவரும் காலத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் முப்படையினரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.



உண்மையில் நடந்த சம்பவம் என்னவென்று சரியான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில் கிண்ணியாவில் அன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து விமானப்படையினரின் உலங்குவானூர்தியில் இடமளிக்கப்படாத நிலையில் மாகண முதலமைச்சர் தரை மார்க்கமாக  சம்பூர் பாடசாலையை வந்தடைந்துள்ளார் இதையடுத்து அமெரிக்க தூதுவரும் ஆளுநரும் வரும்வரை அங்கு அவர் காத்திருந்த நிலையில் அவர்கள் வந்தடைந்த பின்னர் ஆரம்பித்த நிகழ்வில் முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரது பேர்கள் அழைக்கப்படவில்லை இருப்பினும்  ஆளுநர் அவர்களை மேடைக்கு வருமாறு அழைத்த போது  கடற்படை அதிகாரியினால் அவர்கள் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஏற்கனவே இவை தொடர்பில் ஏற்கனவே கடும் ஆத்திரமுற்ற முதலமைச்சர் தன்னுடைய கோபத்தினை கடற்படை அதிகாரி மீது கொட்டித்தீர்த்திருக்கிறார். இதன்போது மேடையில் இருந்த மாணவி ஒருவரின் முகத்தில் அவரது கை தற்செயலாக பட்ட காட்சியும் இங்கு முக்கிய இடம் பிடித்துள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது இந்த காணொளி இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது . வெள்ள அனர்த்த வேளையில் இதனை ஒளிபரப்பி இருந்தால் இது முக்கியத்தும் பெறாது என்பதை உணர்ந்து திட்டமிட்டு நாட்டில் பிரச்சினையை தோற்றுவிக்கும் விதத்தில் இது ஒளிபரப்பாகியுள்ளமை கண்கூடானது. இதனை பார்க்கும் பெரும்பான்மையினர் மத்தியில் தமது யுத்த வெற்றி வீரரை அவமதித்ததாக தோற்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவை தொடர்பில் சமூக இனவாத ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் மக்கள் மிக மோசமான முறையில் முதலமைச்சர் மீது தமது தாக்குதலை மேற்கொள்வதை பார்க்கக்கூடியதாக உள்ளது.

தற்போது இதனை கிழக்கு மாகாண சபை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பது முக்கியமான விடயமாகும் என்ன தான் மேடையில் வைத்து உணர்ச்சி வசப்பட்டாலும் அவர் ஒரு முதலமைச்சர் அதிலும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவர் அவருக்கு அங்கு உரிய கௌரவத்தை வழங்காமை கண்டிக்கப்பட வேண்டியது. இதனை விட மோசமான சம்பவங்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகளினால் அரச ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட ஊழியர் முப்படையை சார்ந்தவராக இருப்பதும் முதலமைச்சர் சிறுபான்மை முஸ்லீமாக இருப்பதுமே பிரச்சினை பெரிதாக காரணமாகிறது. எனவே இதனை உணர்ந்து தம்முடைய தனிப்பட்ட பேதங்களை மறந்து முதலமைச்சருக்கு உதவ கிழக்கு மாகாண சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வட மாகாணசபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை  முன்னுதாரணமாக கொண்டு ( கடுமையான தீர்மானங்கள் தவிர) செயற்படுவதன் மூலம் கிழக்கு மாகண சபை இதற்குரிய சரியான பதிலை இனவாத ஊடகங்களுக்கு  வழங்கமுடியும்.

No comments:

Post a Comment