Sunday, December 28, 2014

மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு அவசியமாகும் சிங்கள வாக்குகளும் பாதுகாப்பு படையினரும்


“ நாட்டை தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளிடமும் ஜிகாத் முஸ்லீம் தீவிரவாதிகளிடமும் கொடுக்கப் போகிறீர்களா அல்லது சிங்கள பௌத்த தேசப்பற்றாளனிடம் தரப் போகிறீர்களா? ”


எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக காணப்படக் கூடிய ஒரு சுலோகமாக  இது அமையலாம்.


ஆகக்கூடியது வெறும் 1 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்றுத் தரக் கூடிய அதாவுல்லா, ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ்தேவானந்தா, ஹிஸ்புல்லா, கருணா, பிள்ளையான், பௌசி ஆகியோரே மகிந்தவிடம் தற்போது எஞ்சியிருக்கும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிறுபான்மை இன அரசியல் வாதிகள். எனவே இந்நிலையில் முற்று முழுதாக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு மகிந்த அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. பொதுபலசெனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள் இதற்கு முக்கிய பங்காற்றலாம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் “ என்ற ஒரு வாக்கியம் கடந்த தேர்தலை போன்று இம்முறை மகிந்தவுக்கு உதவி செய்யப்போவதில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் நாடு பெற்றுக் கொண்டதாக கூறப்படும் வடபகுதிக்கான  ரயில் பாதை,தெற்கு அதிவேக பாதை,விமான நிலைய,துறைமுக ஏனைய கட்டுமானங்கள்  முதலிய அனைத்தும் ஒரு அபிவிருத்தியின் வெளிப்பாடாக காட்டப்படுகின்றது. ஆயினும் இத்தகைய அபிவிருத்திக் கான நிதி வளம் எவ்வாறு செலவு செய்யப் படுகிறது என்பது முக்கியமானது.

நாட்டின் வரவு செலவுத்திட்டத்தில்  கிட்டத் தட்ட 80% ற்கு மேற்பட்ட தொகையினை செலவு செய்யக்கூடிய உரிமையானது மகிந்த மற்றும்   அவர் சார் உறவினர் நண்பர்களுக்கே காணப்படுகிறது. தனக்கு கீழ் உள்ள நிதி அமைச்சு, சகோதரகளான கோத்தபாயவின் நகர திட்டமிடல் அமைச்சு, பசிலின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் மூலமே நாட்டின் கூடுதலான அபிவிருத்திகள்  அனைத்தும் மேற்கொள்ளப் படுகின்றன.  பணம் இவர்களால் கையாளப்படுகையில் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெருமளவு தரகு பணம் பெறப்படுவதாகவும் மேலும் வீணாக செலவு செய்யப் படுவதாக எதிர் கட்சிகள் புள்ளி விபரத்துடன் காட்டுகிறார்கள்.


ஒழுங்கான திட்டமிடல் இன்றி தன்னுடைய சொந்த ஊர் என்னும் காரணத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகம் என்பன  நாட்டுக்கு  எவ்வித பயனையும் தரவில்லை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா முதலிய நிறுவனங்களின் தலைவர்களாக உள்ள ராஜபக்சவின் உறவினர்களின் மீது எந்த வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது ஒவ்வொரு முறையும் வரவு செலவுத்திட்டத்தில் அந் நிறுவனங்களுக்கு  பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது,  இவையெல்லாம் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியக்கூடிய உண்மைகளாகும்.


இவற்றை விட பின்வரும் காரணங்களும் மகிந்த ராஜபக்சவுக்கு சிக்கலைத் தரக் கூடிய காரணிகளாகும்.

முக்கிய உண்மைகளை எடுத்து சொல்ல முயன்ற லசந்த விக்கிரமசிங்க முதலிய ஊடகவியலார்களின் கொலை, லங்கா ஈ நியுஸ் முதலிய இணைய தளங்களின் மீதான தடை.
எரியூட்டப்பட்ட லங்கா ஈ நியூஸ் அலுவலகமும்  சுட்டுக் கொல்லப்பட்டலசந்தவும் 
கொலை வன்முறை ஊழல் என்பன உறுதிப்படுத்தப்பட்டும் கூட அச்சமின்றி வெளிப்படையாக செயற்படும் துமிந்த சில்வா, நிஷாந்த மேர்வின் முதலிய அரசியல் வாதிகள்.

நாட்டின் அறிவு பீடமாக விளங்கும் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களுடனான சம்பள முரண்பாடுகள்

இத்தகைய விடயங்கள் ஓரளவு படித்த மக்களால் மட்டுமே உணரக்கூடிய விடயங்களாகும் நாட்டில் பெரும்பான்மை கிராமப்புற சிங்கள மக்கள் இவற்றை உணர மாட்டார்கள். எனவே கிராமப்புறங்களில் யுத்த வெற்றியை காட்டியும் இனவாதத்தைத் தூண்டியும் மகிந்தவால் வாக்குகளை பெற முடியும். இவர்களை விட ராஜபக்சவின் வெற்றியில் பங்கு வகிக்கக்கூடிய மற்றுமொரு தரப்பாக நாட்டின் பாதுகாப்பு படை விளங்குகிறது. 



புலிகளை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்த்துடன் இணைக்கப்பட்ட பெருந்தொகை படையினருக்கு வழங்கப்பட்ட சலுகைகள்  இன்று வரை தொடர்வதோடு மேலும் அதிகரித்தே செல்கின்றது. எனவே தமக்கு இத்தகைய நன்மைகளை வழங்கும் நபருக்கு எவ்வகையிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க இத்தரப்பினர் நிச்சயம் உதவி செய்வார்கள். இதனை விட தேர்தலை நோக்காக கொண்டு அரச வளங்கள், ஊடகங்கள் என்பன முற்று முழுதாக மகிந்த அரசினால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஊடான பரப்புரைகளை மக்கள் நம்பும் சந்தர்ப்பத்தில் அதுவும் மகிந்தவுக்கு சாதகமாக அமையலாம்.

அடுத்ததாக தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் முஸ்லீம் வாக்காளர்களை எடுத்து பார்க்கும் போது இலங்கையில் மொத்த வாக்காளர்களில் வெறும் 12% மானவர்களே தமிழ் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக காணப்படக்கூடிய வடக்கு கிழக்கு பகுதி வாக்காளர்கள். இதனை விட மலையகம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் குறைந்த அளவில் இவர்கள் காணப்படுகிறார்கள்
 வடக்கு கிழக்கு மாகாண வாக்காளர் விபரம்


நாட்டின் மொத்த வாக்காளர் தொகை 



 எனவே சிங்கள வாக்குகளை கூடியளவு பெறும் நபருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது நாட்டில் பெரும்பான்மையாக காணப்படும்  சிங்கள வாக்காளர்களில்  குறைந்தது   35 வீதமானவர்களாவது எதிரணிக்கு  வாக்களிக்காவிடின் 2020  வரை இலங்கையின் தலை எழுத்து மாற்ற முடியாத ஒன்றாகிவிடும்..