Tuesday, January 23, 2018

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 ஒரு முன்னோட்டம்


பெப்ரவரி 10ம் திகதி இலங்கை போட்டிமிக்க தேர்தலை சந்திக்கிறது . வழமையாக இரு முனைப் போட்டியாக இடம்பெறும் தேர்தல் மகிந்தவின் புதிய கட்சியின் பிரசன்னத்தால் மும்முனைப் போட்டியாக  மாறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

மகிந்தமைத்திரி அணிகள் தனித் தனியே போட்டி இடுவது சுதந்திர கட்சியின் வாக்குகளை பிரித்து ஐ.தே.கட்சிக்கு சாதகமாக அமையுமா?

சுதந்திரக்கட்சியின் முக்கிய பிரமுகர்களினதும் விமல் வீரவன்சஉதய கம்மன்பொல  முதலிய இனவாத தரப்பினரதும் ஆதரவு,  மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வு  மீண்டும்  மகிந்தவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்குமா?

மகிந்த அணியின் தாக்கத்தால்  மைத்திரி அணி ம.வி.முன்னணியையும் விடவும்  குறைவான வாக்குகளை பெறுமா?

இவை எவற்றையும் எதிர்வு கூறமுடியாத சூழ்நிலையே தற்சமயம்  காணப்படுகிறது. என்ன தான் போராட்டம் நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவினாலும் தேர்தல் என்று வரும் போது மக்கள் விடுதலை முன்னணி ஒவ்வொரு தடவையும் பொதுமக்களால் ஏமாற்றப்படும் கட்சியாகவே விளங்குகிறது. இம்முறையும் இது தொடரக்கூடிய சூழ்நிலையே  காணப்படுகிறது. 




சிங்கள மக்களின் வாக்குகள் இவ்வாறு  ஒருபுறம் இருக்க முஸ்லிம்களின் வாக்குகளை எடுத்து நோக்கினால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி   என பலவாறாக தரப்பினர் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை களமிறங்குவதால் முஸ்லீம் வாக்குகள் பிரிவடையக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. தம்மால் தனித்து வெற்றி பெற முடியாத பிரதேசங்களில் முஸ்லீம் கட்சிகள் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி இடுவதால்   எந்த ஒரு முஸ்லீம் பிரதேசத்திலும் தமிழ் அல்லது சிங்களவர்களால் வெற்றி பெற முடியாது எவ்வழியினிலும் புத்திசாலி முஸ்லீம் மக்கள் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்து சமூகத்தை காப்பாற்றிக் கொள்வார்கள்.



அடுத்து தமிழ் வாக்காளர் பக்கம் வருவோம். வடகிழக்குக்கு வெளியே உள்ள தமிழ் வாக்காளர்களை  பொறுத்தவரையில் மனோகணேசனின் ஒருமித்த முற்போக்கு கூட்டணி தனித்தும் ஐ.தே.கட்சியுடன் இணைத்தும் சில சபைகளை கைப்பற்றக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. தொண்டமானின் செல்வாக்கின் மூலமாக மலையகத்தில் இ.தொ.கா ஒருசில இடங்களில் வெற்றிபெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகள்


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒரு தவணை நிறைவுற்று இரண்டாம் தவணைக்காக தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதி அது. லசந்த விக்கிரமதுங்க முதலிய பிரபல ஊடகவியலாளர்கள்  கொலை, ஊடகங்கள் மீதான அடக்குமுறை, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் தொடர்பில் சரத் என் சில்வாவின் கருத்து உட்பட மகிந்த மீது எத்தனையோ  விதமான குற்றச்சாட்டுக்கள், இருந்தும் நடந்தது என்ன மக்களால் திடிரென புகுத்தப்பட்ட சரத் பொன்சேகாவை பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்க முடியவில்லை விரும்பியோ விரும்பாமலோ மகிந்தவே அவர்களுக்கு இருந்த ஒரே தெரிவு.  ஏறத்தாழ இதே நிலைமையே தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது காணப்படுகிறது. புதிய தேர்தல் முறைமையின் கீழ் ஒரு வாக்கினை கூடுதலாக பெற்றால் கூட ஒரு வட்டாரத்தை கைப்பற்ற முடியும் என்ற வகையில் இவர்களுக்கான வெற்றிவாய்ப்பு மிக பிரகாசமாகவே காணப்படுகிறது.  பொதுமக்களிடத்தில் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருந்த நபர்களை தமது வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளமை இவர்களது மிகப்பெரிய பலமாகும். கிழக்கினை பொறுத்த வரை இவர்களுக்கு வேறு எந்த தமிழ் தரப்பினரிடமிருந்தும்  போட்டியே இல்லை என்று தான் கூற வேண்டும். 

த.தே.கூட்டமைப்புக்கு எதிராக களமிறங்கியுள்ள ஆனந்த சங்கரி சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டணி படுதோல்வி அடையக் கூடிய நிலையிலேயே இருக்கிறது.ஏற்கனவே வங்குரோந்து நிலையில் இருந்த தமது அரசியல் இருப்பினை பாதுகாத்து கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இவர்களது கூட்டணியால் எந்தவொரு வட்டாரத்திலும்  வெற்றிபெறவே முடியாது. 



தமிழ் தேசிய கூட்டணிக்கு மாற்றாக தம்மை நிலை நிறுத்த முயலும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரை ஒருசில  இடங்களில் அவர்களால் வெற்றிபெற முடியும் ஆயினும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு வாக்கு வங்கியை அவர்கள் இன்னமும் பெறவில்லை என்றே கூறமுடியும். ஏற்கனவே அரசியல் அனுபமில்லா புதிய வேட்பாளர்கள்,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  முதலமைச்சர் விக்னேஸ்வரனது  வெளிப்படையான ஆதரவு கிடையாமை முதலியமை இவர்களுக்கு பாதகமான சில காரணிகளாகும். 


தேசிய கட்சிகளின் சார்பாகவும் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் களமிறங்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக வடக்கில்  அங்கஜன் ராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் போன்றோர்  மத்திய அரசில் தமக்கு உள்ள செல்வாக்கின் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கிய சேவைகளின் அடிப்படையில் ஒரு ஆசனத்தையாவது வெல்லக்கூடிய அளவு பலத்தை கொண்டிருக்கிறார்கள். 



வடக்கு கிழக்கு   தமிழ் பிரதேசங்களை பொறுத்தவரை இன்று நாம் அவதானிக்கும் ஒரு சில அபிவிருத்திகளோ அல்லது அரசியல் ரீதியான வேலை வாய்ப்புகளோ  ஈபிடிபி மூலமாகவோ அல்லது கருணாவின், பிள்ளையானின் மூலமாக எமக்கு கிடைத்தவை. இவர்கள் மீது ஆட்கடத்தல் கொலை, கப்பங்கோரல் என நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட எத்தனையோ சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற போதிலும்  இவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் இன்னமும் தமது நன்றி உணர்வை காட்டுவது அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஒருசில ஆசனங்களின் மூலம் தெளிவாக புலப்படுகிறது.  

முப்பது வருடங்களுக்கு முன்னர் தமது சுயநல அரசியலுக்காக பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்களை தூண்டி தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயன்ற அரசியல் வாதிகளுக்கு ஒருகட்டத்தில்  அதுவே அவர்களுக்கு எதிராக மாறி அவர்களை பலியாக்கியது. அதிலிருந்து ஒருவாறாக தப்பி பெரும்பான்மை ஆட்சியாளர்களின் அரவணைப்புடன் பொதுமக்கள் செல்வாக்கை இழந்து வாழ்ந்துவந்த நிலையில் 2001  இல்  விடுதலைப்புலிகள் தம்முடைய போராட்டத்தின் உச்ச கட்ட வெற்றியை பெற்றிருந்த நிலையில் அவர்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தரப்பினரே இன்று தமிழ் தேசியம் பேசி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். சுமந்திரனை தமக்கு தீர்வினை பெற்றுத்தரக்கூடிய புத்திசாலியாக ஒரு தரப்பு கொண்டாட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை  புரட்சியாளராக இன்னுமொரு தரப்பு தூக்கி பிடிக்கிறது. ஆனால் இறுதியாக தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கு அவர்களது  குடும்பத்தையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ளவே எமது அப்பாவி தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படப்போகிறது.  

தமிழ் ஈழ  விடுதலைப்புலிகளின் உன்னதமான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த நிலையில்  இன்னமும் “ஒருமித்த தேசம்”, “இரு தேசம் ஒரு நாடு” என்ற முட்டாள் தனமான கொள்கையின் கீழ் தமிழ்மக்கள் இவர்கள் தொடர்ந்தும்   ஏமாற்றி வருவது மிகுந்த வேதனையை விளைவிக்கும் செயலாக  காணப்படுகிறது.  இன்றைய சூழ்நிலையில் இவை எதுவும் எமது மக்களுக்கு சோறு போடப் போவதில்லை. எமது போராட்டத்தை பயன்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிய இந்தியாவோ,அமெரிக்காவோ எமக்கு தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை.  எம்மை பொருளாதார ரீதியில் வளப்படுத்தி மத்திய அரசாங்கம் எம்மிடமும் தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எமது பிரதேசங்களை, உட் கட்டமைப்பினை அபிவிருத்தி செய்ய வேண்டும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும். இதற்காக தன்னும் மத்திய அரசுடன் இணக்க அரசியல் ஏற்படுத்தப்பட்டு  துரோகி பட்டத்தை துணிந்து வாங்கி எவராயினும் மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். 

No comments:

Post a Comment