Friday, September 23, 2022

இலங்கையின் கேவலமான உதைபந்தாட்ட வரலாறு...

 

ஆசியாவின் கிரிக்கெட் சம்பியன்கள், ஆசிய வலைப்பந்து சம்பியன்கள்  என மார்தட்டிக்கொள்ளும் இலங்கை உலகின் முக்கிய விளையாட்டான உதைபந்தாட்டதில் ஆசியாவின் கடைசி நிலையிலும் சர்வதேச மட்டத்தில்  கடைசிக்கு 4 இடங்கள் முதலும் அதாவது 211 நாடுகளில் 207வது உள்ளது என்பதை எம்மில் எத்தனை பேர் அறிவார்கள். உலக தரப்படுத்தலில் 1995 ற்கு முற்பட்ட காலப்பகுதியில் பெறப்பட்ட 122 ஆவது இடமே இலங்கையின் சிறந்த பெறுதியாக இன்றுவரை காணப்படுகிறது.



உதைபந்தாட்டத்தை பொறுத்தவரை வரலாற்று ரீதியாக இலங்கையின் நிலை மிகவும் கேவலமான ஒன்று தான் 1995 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட தெற்காசிய தங்கக் கிண்ணம் ஒன்று தான் கால்பந்தில் இலங்கை வென்ற ஒரே ஒரு வெற்றிக் கிண்ணமாகும்.

 

1995 தெற்காசிய தங்க கிண்ண வெற்றி அணி..


உண்மையில் உதைபந்தாட்டத்தை பொறுத்தவரை கிரிக்கெட் போல பல உபகரணங்கள் தேவையில்லை வெறும் பந்து மட்டுமே போதுமானது. அந்த வகையில் உண்மையில் ஆர்வம் இருப்பின் அதனை அபிவிருத்தி செய்வது பெரிய விடயமாக இருக்க போவதில்லை  உலகில் உதைபந்தில் இன்று சிறந்து விளங்கும் பிரேசில் நாட்டில் வறுமை நிலை காரணமாக ஒருகாலத்தில் உதைபந்து வாங்க கூட பணம் இல்லாத நிலையில் வெறும் மாம்  பழங்களை வைத்து வீரர்கள்  பயிற்சி செய்தார்கள் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் அங்கீகாரம் உதைபந்தாட்டத்துக்கு வழங்கப்படாமையும் ஒரு காரணமாகும். தேசிய அணியை பொறுத்தவரை திறமையின் அடிப்படையில்  மூன்று இனங்களை சேர்ந்த வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இதனை விட எத்தனை பயிற்சியாளர்களை மாற்றியும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இலங்கையின் இதுவரையான பயிற்சியாளர்கள் 


ஏனைய விளையாட்டுகளில் காட்டும் திறமையை ஏன் உதைபந்தில் எம்மால் காட்ட முடியவில்லை? 1995 காலப்பகுதியில் இலங்கை அணியில் இடம்பெற்வரும் 2009-10 காலப்பகுதியில் இலங்கையின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் இருந்த  முகமட் அமானுல்ல வெளியிட்டுள்ள facebook பதிவு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் உண்மை முகத்தை காட்டுகிறது.

https://www.facebook.com/amanullacoach



நிலைமை இப்படி இருக்கும் போது  இன்று வந்த செய்திகளின் படி ஐஸ்லாந்தின் இரண்டாம் பிரிவு கழகமான த்ரோட்டர் வோகுமின் ஒலிவர் கெலார்ட் ரைட் விங்கர் , ஜேர்மனியின் நான்காம் பிரிவு  கழகமான என்ட்ராக்ட் த்ரியர் இன் ஜேசன் தயாபரன்,  ஜேர்மனியின் மூன்றாம் பிரிவு  கழகமான  எஸ்ஜி டைனமோ டிரெஸ்டன்  வீரர் கிளாடியோ கம்மர்க்னெக்ட்  ஆகியோர்  முதன்முறையாக இலங்கையின்  தேசிய கால்பந்தாட்ட அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  இப்படி வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வீரர்களை அணியில் புகுத்துவதன் மூலம் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. வெறுமனே போட்டிகளுக்கு மட்டும் வீரர்களை அழைப்பதை விடுத்து ஒரு அணியாக வீரர்களை உருவாக்க வேண்டும். உதைபந்தாட்டம் முற்று முழுதாக குழு முயற்சியிலே தங்கி இருக்கும் ஒரு விளையாட்டு.

FIFA உட்பட பலவழிகளில் நாட்டுக்கு உதைபந்தாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு பணம் வருகிறது ஆனால் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதே இங்கு பிரச்னையாகும். ஒட்டுமொத்தத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஊழல் ஒழிக்கப்பட்டு நாட்டை உதைபந்தில் முன்னேற்றுவதற்கான நீண்ட கால நோக்கிலான திட்டம் தீட்டப்படுவது மாத்திரமே எமக்கு ஓரளவுக்கு ஆவது மரியாதையான நிலைமையை பெற்றுத்தரும்.

இறுதியாக இலங்கையின் உதைபந்தாட்ட வரலாறு  தொடர்பிலான விக்கிபீடியா பதிவை  இலங்கையின் தேசிய உதைபந்தாட்ட அணி - விக்கிபீடியா  இணைப்பில்  பார்க்கவும்.


 

 

No comments:

Post a Comment