Tuesday, March 7, 2017

இலங்கை தமிழ் அரசியல் தலைமைகள் மீதான கேள்விகளும் அதன் பிரதிபலிப்பும்


ஆண்டுகள் 8 ஆனாலும் கூட யதார்த்தத்தில் இன்னமும்  நிரப்படப்படாதுள்ளது  இலங்கை தமிழ் அரசியல் தலைமை. இருந்த போதிலும் வேறு வழியின்றி ஒரு பொம்மை தலைமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று காணப்படுகிறது விரும்பியோ விரும்பாமலோ வேறு வழியின்றி அவர்களை அரசியல் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக பார்க்கும் நிலையில் அண்மையில் யாழ் மற்றும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களிடத்தில் இடம்பெற்ற “ சொல்லாடல் “ நிகழ்வின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இன்றுள்ள இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் நிறைவேற்றும் தகைமை அற்றவர்கள் என்ற முடிவு இந்த விவாதத்தின் வழியே எட்டப்பட்டு அது தொடர்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.



விவாதத்தில் கலந்து கொண்ட யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவனால் மேடையில் வைத்து வினவப்பட்ட சில கேள்விகள் அந்த மேடையும் தாண்டி மக்களிடத்தில் முக்கியம் பெற்றுள்ளது என்பதை நேற்றைய தினம் திரு.சுமந்திரனால் வெளியிடப்பட்ட பதில் காணொளி மூலம் காண முடிகிறது. மீள் குடியேற்றம், அரசியல் தீர்வு என பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும் அவற்றுக்கு பதிலலிக்காத சுமத்திரன் சம்பந்தனுக்கு சொகுசு வாகனம் வேண்டும் என தான்  பாராளுமன்றத்தில் கேட்டதாக கூறியமை பொய் எனக்கூறி அதற்கு விளக்கமளித்துள்ளார் . அது மட்டுமல்லாது எமது மாணவர் படையணியை இறக்கி தீர்வினை பெறுகிறோம் என மாணவன் கூறியமைக்கு அது ஆயதப்போராட்டம் என்றவாறாக வேறு தனி விளக்கமும் அளித்துள்ளார். 



விவாதம் தொடர்பிலான சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க இன்று தமிழ் மக்களின் எதிர்காலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தான் இருக்கிறது சம்பந்தன், சுமந்திரனின் அரசியல் சாணக்கியமே தீர்வினை பெற்றுத்தரும் என்றவாறான வாதங்களை ஒரு சிலரிடமிருந்து அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனில் இதன் அடிப்படை காரணி எதுவென்பதை 2000 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள முடியும் தன்னுடைய சொந்த மாவட்டத்திலேயே வெறும் 10000 வாக்குக்களை மாத்திரம் பெற்ற சம்பந்தன் இன்று ஆளுமை மிக்க தலைவரா? அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்று உள்ள சகல கட்சிகளும் இணைந்து பெற்ற வாக்குகள் தான் என்ன? அதன் பின்னர் விடுதலைப்புலிகள் கூறினார்கள் என்ற ஒரே காரணத்தினால் இவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பினால் பெற முடிந்தது. 2009 இல்  புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் கூட அதே காரணத்தினாலே 2015 தேர்தலில் கூட்டமைப்பினால் அதனை தொடர முடிந்தது. அனால் இன்றோ மக்கள் விரக்தியின்  உச்சத்தில் இருக்கிறார்கள் அரசியல்வாதிகளை இன்னமும் நம்பும் நிலையில் அவர்கள் இல்லை எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள் இதனை நிச்சயம் உறுதிப்படுத்தும்.

No comments:

Post a Comment