Thursday, June 14, 2018

பிபா உலகக்கிண்ணம் 2018 ஒரு முன்னோட்டம்



உலகில் அதிகூடிய மக்களால் விருப்பப்படும் கால்பந்தாட்டப் போட்டிகளில் முக்கிய தொடராக விளங்கும் உலகக்கிண்ணம்  இன்று ஜூன் 14 இலங்கை நேரப்படி பி.ப 8.30 மணிக்கு ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. உலகளாவிய ரீதியில் கண்டங்களுக்குள் இடம்பெற்ற  பல்வேறு தெரிவுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதியாக 32 நாடுகள் இந்த இறுதிச் சுற்றுத் தொடரில் பங்கு பற்ற தகுதியை பெற்றுள்ளன. தகுதிப் போட்டிகளை பொறுத்தவரை இம்முறை நான்குமுறை உலகக் கிண்ண வெற்றியாளர்கள் இத்தாலி கடந்த இரு உலகக் கிண்ண போட்டிகளில் முறையே  2ஆம் 3ஆம்  இடங்களை பிடித்த நெதர்லாந்து தொடர்ச்சியாக கோபா அமெரிக்க தொடரில் அடுத்தடுத்து கிண்ணம் வென்ற சிலி ஆகிய நாடுகள் இம்முறை தகுதி பெறாத முக்கிய அணிகளாக விளங்குகின்றன. அதே நேரம் வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்தும் பனமாவும், 36 வருடங்களுக்கு பின்னர் பெருவும் 28 வருடங்களுக்கு பின்னர் எகிப்தும் தகுதியை பெற்றுள்ளன.

அந்த வகையில் ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்களில் இருந்து அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா,தென் கொரியா ஆகிய நாடுகளும் ஆபிரிக்காவில் இருந்து எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனகல், துனீசியா ஆகிய நாடுகளும் ஐரோப்பாவில் இருந்து பெல்ஜியம், குரோசியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் ஐஸ்லாந்து, போலந்து, போர்த்துகல், ரஷ்யா, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் வட அமெரிக்காவில் இருந்து கோஸ்ட்டாரிக்கா, மெக்சிக்கோ, பனாமா ஆகிய நாடுகளும் தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜன்டீனா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய நாடுகளும்  இம் முறை போட்டிகளில் பங்கு பற்றுகின்றன.

 இந்த 32 நாடுகளும் 8 குழுக்களாக பிரிக்கப்படுள்ளன. குழு A ஐ பொறுத்த வரையில் இதில் தென் அமெரிக்காவின்  உருகுவே பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது  எனவே இக்குழுவில் இருந்து மிக இலகுவாக உருகுவே தெரிவாக தற்போது புகழ் பெற்ற வீரராக உருவெடுத்து வரும் லிவர் பூலின் முகமட் சாலாவின் எகிப்து அல்லது போட்டியை நடத்தும் ரஷ்யா ஆசியாவின் சவூதி அரேபியாவை தாண்டி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழு B யில் தற்போதைய ஐரோப்பிய சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் முன்னால் உலக சம்பியன் ஸ்பெயின் என்பன இலகுவாக இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இடம்பெறும் ஏனைய இரு அணிகளான மொராக்கோ,ஈரான் என்பன இவற்றுடன் போட்டிபோடக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.

குழு C யில் இருந்து முன்னால் உலக சம்பியன் பிரான்ஸ் இலகுவாக வெற்றியாளராக தெரிவு செய்யப்பட தென் அமெரிக்கா சம்பியன் சிலியை வீழ்த்தி 36 வருட இடைவெளியில் பங்கேற்கும் பெரு இரண்டாவது அணியாக தகுதி பெறலாம் கிறிஸ்டியன் எரிக்கனின் டென்மார்க் மற்றும் அவுஸ்ரேலியா முதல் சுற்றுடன் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.குழு D யில் இருந்து முன்னால் உலக சம்பியன் அர்ஜென்டினா மற்றும் டீகோ லோறன் இவன் ராக்கிடிக், லூக்கா மொட்ரிக் இவன் பேர்சி, மரியோ மண்டுசிக் ஆகிய முக்கிய வீரர்களை கொண்ட குரோசியா இலகுவாக இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் இக்குழுவில் இடம்பெறும் நைஜீரியா, ஐஸ்லாந்து என்பனவற்றுக்கு அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் சாத்தியம் இல்லை என்றே கூற வேண்டும்.

குழு E ஐ பொறுத்த வரை 5 முறை சம்பியனான பிரேசில் முதலாவதாக தெரிவு செய்யப்பட அடுத்த இடத்தை பிடிக்க சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்ட்டாரிக்கா ஆகியவற்றுக்கிடையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு சம்பியன் ஜெர்மன் மற்றும் வட அமெரிக்க சம்பியன் மெக்சிகோ என்பன குழு F இல் இருந்து இலகுவாக தகுதி பெற ஆசியாவின் தென்கொரியா மற்றும் ஐரோப்பாவின் சுவீடன் வெளியேறக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன.

குழு G ஐ பொறுத்தவரை இளம் வீரர்களைக் கொண்ட இரு பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற உலகக்கோப்பையில் மோசமான வரலாற்றை கொண்ட துன்நீசியாவும் முதல் தடவையாக தகுதி பெற்ற பனாமாவும் வெளியேற்றப்படலாம்.இறுதியாக குழு H இல் இருந்து தென் அமெரிக்காவின் மற்றுமொரு பலம் வாய்ந்த அணியான ஜேம்ஸ் ரோட்ரிகஸின் கொலம்பியா மற்றும் ராபர்ட் லெவோன்டஸ்கியின் போலந்து என்பன அடுத்த சுற்றுக்கு தகுதி பெற ஆசியாவின் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் செனகல் என்பன முதல் சுற்றுடன் வெளியேறலாம்.

அந்த வகையின் முதல் முற்றில் இருந்து பின்வருமாறு அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும்.





ரவுண்ட் ஒப் 16 எனப்படும் இரண்டாவது சுற்றை எடுத்துக் கொண்டால் இதில் ஐரோப்பிய சம்பியன் போர்த்துக்கல் தென் அமெரிக்காவின் இரண்டாவது இடத்தை பெற்ற உருகுவே என்பன ஒன்றை ஒன்று சந்திக்கும் நிலை காணப்படுகிறது அதே நேரம் மற்றுமொரு போட்டியில் உலக சம்பியன்  ஸ்பெயின் அணி எகிப்து அணியை சந்திக்கலாம் அந்த வகையில் ஸ்பெயின் இலகுவாக எகிப்தை தோற்கடித்தாலும் போர்த்துக்கல் உருகுவே போட்டி மிக இறுக்கமாக காணப்படலாம் தனியே கிறிஸ்டியானோ ரோனல்டோவை மட்டும் போத்துக்கல் நம்பியிருக்க முடியாது அந்தவகையில் கோல் போடுவதில் சிறந்து விளங்கும் முன்கள வீரர்களான எடிசன் கவாணி, லூயிஸ் சுவாரஸ் அட்லாட்டிகா மட்ரிட் பின்வரிசை பின்வரிசை வீரர்களான டிகோ கொட்டின், ஜோஸ் ஜிமேன்ஸ் ஆகியோரை கொண்ட இவ்வணிஉருகுவே காலிறுதிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த குழுக்களை பொறுத்தவரை சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் வீரர்களை கொண்ட பிரான்ஸ் குரோசியாவை வீழ்த்தியும் அர்ஜென்டினா பெருவை வீழ்த்தியும் காலிறுத்திக்கு   முன்னேறலாம். ஏனைய இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் முன்னால் உலகசாம்பியன் ஜெர்மனி மற்றும் பிரேசில் முறையே மெக்சிகோ மற்றும் செர்பியாவை வீழ்த்த பெல்ஜியம் போலந்தையும் இங்கிலாந்து கொலம்பியாவையும்  வீழ்த்தும் என  எதிர்பார்க்காலாம். அந்தவகையில்  இரண்டாவது சுற்றின் முடிவுகள் பின்வருமாறு அமையலாம்.


காலிறுதி போட்டிகளை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியம் வாய்ந்த  போட்டிகளாக கருதப்படுகின்றன அந்த வகையில் பிரான்ஸ், உருகுவே அணிகள் ஒன்றே ஒன்று சந்திக்கும் போது அது இளமைக்கும் அனுபவத்திற்கும் இடையிலான முன்னால் உலக சம்பியன்களின் போட்டியாக பார்க்கப்படும் தென்னமெரிக்காவில்  இரண்டாவது அணியாக தெரிவாகிய உருகுவே கோப்பையை வெல்லும் என எதிர் பார்க்கப்படும்  பிரான்ஸ் அணிக்கு மிகுந்த  சவாலை வழங்கினாலும் பிரான்ஸ் அணி கூடுதலான வாய்ப்புக்களை கொண்டுள்ளது. அடுத்த போட்டியில் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின் ஆர்ஜன்டீனா அணிகள் அண்மையில் சந்தித்த போட்டியில் 6-1 என்ற வீதத்தில் வெற்றி பெற்ற ஸ்பெயின் வெற்றி பெறக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டு இருப்பினும் அப்போட்டியில் மெஸ்ஸி விளையாடாமை ஸ்பெயின் அணியின் பயற்சியாளர் திடிரென மாற்றப்பட்டமை என்பன இங்கு முக்கியம் வாய்ந்த விடயங்களாகும். தலை சிறந்த முன்னணி வீரர்களை கொண்டிருப்பினும் அதன் தடுப்பாட்டம் சிறந்ததாக இல்லாமை ஆர்ஜன்டீனாவின் பலவீனமாக கருதப்படுகிறது  அடுத்த போட்டியில் முன்னால் சம்பியன் பிரேசிலை எதிர்கொள்ளும் பெல்ஜியம் அதனது கால்பந்தாட்ட வரலாற்றில் தலை சிறந்த அணியை தற்போது கொண்டுள்ளமை மிக முக்கியமான விடயங்களும் அந்த வகையில் கெவின் டி புருனி, ஈடன் ஹசார்ட் ,டிரயிஸ் மாட்டினஸ் ரொமேலு லுக்காகு என்ற சிறந்த முன்கள ஆட்டக்காரர்களையும் தலை சிறந்த கோல் காப்பாளர் தீபனுட்  கோடாய்ஸ் ஐயும் தாண்டி வெற்றி பெற பிரேசிலின் அனுபவம் அதற்கு கை கொடுக்கலாம். இறுதியாக மற்றுமொரு காலிறுதியில் சந்திக்கும் நடப்பு சம்பியன் ஜெர்மனிக்கு இளம் வீரர்களைக் கொண்டுள்ள இங்கிலாந்து பாரிய சவாலாக விளங்கினாலும் கடந்த கோப்பை வரலாறுகள் இங்கிலாந்துக்கு பாதகமாகவும் ஜெர்மனிக்கு சாதகமாகவும் காணப்படுகின்றன. ஹரி கேன்,மார்கஸ்  ரஷிபோர்ட், ரஹீம்  ஸ்டெர்லிங், டெல் அலி முதலிய தலைசிறந்த இளம் முன்கள வீரர்களைக் கொண்ட இங்கிலாந்துக்கு மற்றுமொரு காலிறுதி தோல்வியாக இது அமையும் சாத்தியக் கூறுகளே காணப்படுகின்றன. காலிறுதிப் போட்டி முடிவுகள் பின்வருமாறு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் அடிப்படையில் பார்க்கும் போது பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி ஆகிய நான்கு அணிகளில் ஒன்றே இம்முறை உலக கிண்ணத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம்.  அந்த நான்கு அணிகள் தொடர்பிலும் கிண்ணத்தை வெல்லும் என கூடுதலாக எதிர் பார்க்கப்\படும் அணி தொடர்பிலும் அடுத்த பதிவில் பார்ப்போம்.



No comments:

Post a Comment