Saturday, June 30, 2018

சமகால இரு கால்பந்து நாயகர்களின் இறுதி உலகக் கிண்ணமும் சில யதார்த்தங்களும்



2006 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் உதைபந்தாட்டத்தை பார்க்க ஆரம்பித்த எவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் இரு பெயர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி தான். இன்றைய கால்பந்து உலகில்  உதைபந்தாட்டத்தை பார்க்காத எவருக்கும் கூட ஊடகங்கள் மூலமாக  இவர்கள் பற்றி  அறிந்திருப்பார்கள். முறையே 1985 ,1987 ஆண்டுகளில் பிறந்த இருவரினதும் கால்பந்து வாழ்க்கை இள வயதிலேயே ஆரம்பித்தது அந்த வகையில்  2003 ஒகஸ்ட் 20 இல் கசகஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 2005 அக்டோபர் 17 இல் ஹங்கேரி அணிக்கு எதிராக லியனல் மெஸ்ஸியும் தத்தமது தேசிய அணிகளுக்காக விளையாட ஆரம்பித்து இருந்தார்கள். இதே ஆண்டுகளில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்காக கழக மட்டத்தில் விளையாட ஆரம்பித்து இருந்தார்கள். இதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே  போர்த்துக்கல் ஸ்போர்டிங் அணிக்காகவும் பார்சிலோனா பீ அணிக்காகவும் இருவரும் தமது திறமைகளை வெளிக்காட்டி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

மான்செஸ்டர் யுனைடெட் சார்பாக தனது முதலாவது கோலை போட்டபின்னர்

கிறிஸ்டியானோ ரொனால்டோவை  எடுத்துக் கொண்டால் 2003 தொடக்கம் 2009 வரை மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் அதில் இருந்து இன்றுவரை ரியல் மட்ரிட் அணியிலும் விளையாடி வருகிறார். மொத்தமாக 758 கழக மட்டப் போட்டிகளில் பங்குபற்றி 571 கோல்களை போட்டுள்ளார். இதனை விட 2 ஸ்பானிய லாலிகா சாம்பியன்ஷிப்ஸ், 3 இங்கிலாந்து பிரிமியர் லீக் ,5 ஐரோப்பிய  சம்பியன் சிபிஸ்,4 பிபா உலக கழக கிண்ணம் ஆகியற்றை வென்று இருப்பதுடன் தனிப்பட்ட ரீதியில் 5 தடவைகள் பிபா வின் ஆண்டின் சிறந்த வீரருக்கான பலன் தி ஓர் விருதையும் 4 தடவைகள் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதையும் வென்றுள்ளார்.


லியனல் மெஸ்ஸி 
பார்சிலோனா  சார்பாக தனது முதலாவது கோலை போட்டபின்னர்


லியனல் மெஸ்சியும் பார்சிலோனா கழகத்திற்காக இதுவரை 637 போட்டிகளில் பங்கேற்று 552 கோல்களை போட்டுள்ளதுடன்  9 ஸ்பானிய லாலிகா சாம்பியன்ஷிப்ஸ், 4 ஐரோப்பிய  சம்பியன் சிபிஸ், 3 பிபா உலக கழக கிண்ணம் ஆகியற்றை வென்றுஇருப்பதுடன் தனிப்பட்ட ரீதியில் 5 தடவைகள் பிபா வின் ஆண்டின் சிறந்த வீரருக்கான பலன் தி ஓர் விருதையும் 3 தடவைகள் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதையும் வென்றுள்ளார்.

தமது நாடுகள்  சார்பாக 
நேற்றைய போட்டிகளின் போது 

தமது நாட்டு அணிக்காக இவர்களது திறமையை எடுத்துக் கொண்டால் அது குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதுவரை போர்த்துக்கல் அணிக்காக 154 போட்டிகளில் பங்கேற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 85 கோல்களை பெற்றுள்ள போதும் 2016  ஐரோப்பிய கிண்ணம் ஒன்று தான் இவரால் வெல்லப்பட்ட ஒரே கிண்ணமாகக் காணப்படுகிறது. உலக கிண்ணப் போட்டிகளை எடுத்துக் கொண்டால் இதுவரை நான்கு உலக கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 17 போட்டிகளில் பங்கேற்று 7 கோல்களை பெற்றுள்ளதுடன் இவற்றில் இதுவும் நோக் அவுட் சுற்றுகளில் பெறப்பட்டவை கிடையாது. இவரைப் போலவே லியனல் மெஸ்ஸியும் ஆர்ஜன்டீனா அணிக்காக மொத்தமாக 128 போட்டிகளில் பங்கேற்று 65 கோல்களை பெற்றுள்ளார் ஒரு உலகக் கிண்ணம் 2 கோபா அமெரிக்க சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டிவரை சென்ற போதிலும் அவரால் ஒரு கிண்ணத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. உலக கிண்ணப் போட்டிகளை எடுத்துக் கொண்டால் இதுவரை நான்கு உலக கிண்ணப் போட்டிகளில் மொத்தமாக 19 போட்டிகளில் பங்கேற்று 6 கோல்களை பெற்றுள்ளதுடன் இவற்றிலும்  எதுவும் நோக் அவுட் சுற்றுகளில் பெறப்பட்டவை கிடையாது.

பேலே மரடோனா தமது காலப்பகுதிகளில்  


இந்த இடத்தில் தற்போதைய தலைமுறையினரால் இவ்விருவரும் உலக கால்பந்தாட்ட சரித்திரத்தில் ஜாம்பவானாக போற்றப்படுவது என்னைப் பொறுத்தவரை கேலிக்குரிய ஒன்றே ஆகும். இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு பின்னர் கழகம் தவிர்ந்த சாதனை ஏடுகளில் இவர்களை எவரும் பொருட்படுத்தப் போவதில்லை. இவர்களால் ஒருபோதும்  உலக ஜாம்பவான்களான  பேலே அல்லது மரடோனாவை நெருங்கவே முடியாது. தமது நாடுகளை  முன்னே கொண்டு செல்வதில் பிரான்ஸின் சிடேன், பிரேசிலின் ரொனால்டோ  கூட இவர்களுடன் ஒப்பிடும் போது  மேலேயே காணப்படுகிறார்கள்.


கால்பந்தாட்டம் தனியே ஒருவரை மட்டும் சார்ந்ததல்ல 11 பேரும் அதற்கு பங்களிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் உலக கிண்ண நோக் அவுட் போட்டிகளில் கோலை நோக்கி 48 சொட்களை அடித்திருந்தும் கூட அவற்றின் மூலம் இவர்களால் ஒரு கோலைக் கூட பெற முடியவில்லை என்பது   தனியே அணி மீது மாத்திரம் குற்றச்சாட்டினை சுமத்த முடியாமைக்கு ஆதாரமாக விளங்குகிறது. எனவே இவர்களை வெறுமனே சமகால ஜாம்பவான்களாக மட்டுமே கருத  முடியும்.



இம்முறை  தொடர்ச்சியாக நான்காவது தடவையாக இவர்கள் இருவராலும் உலக கிண்ணத்தை வெற்றி பெற முடியாத நிலையில் இதுவே இவர்களின் இறுதி உலக கிண்ணமாக அமையலாம். கழக மட்டங்களில் இன்னமும் சில வருடங்களுக்கு மேலும் சில சாதனைகளை இவர்களால் படைக்க கூடியதாக இருப்பினும் ஒரு உலக கிண்ணம் கூட கைப்பற்ற முடியாமை இவர்களது கால்பந்தாட்ட வாழ்வில் கரும்புள்ளியாகவே அமையும்.

No comments:

Post a Comment