Thursday, July 30, 2020

2020 பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கு தமிழ் அரசியல்





தேர்தலுக்கு இருப்பது இன்னும் சில  நாட்களே. வடகிழக்கு தமிழ் அரசியலில் பல தேர்தல்களுக்குப் பிறகு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசன எண்ணிக்கையில்  குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி ஆரம்பிக்கப் போகும் தேர்தலாக இது அமையவிருக்கிறது. 2009 இல் புலிகள் அழிக்கப்பட்டதுடன் அவர்களால் உருவாக்கப்பட்ட பல அமைப்புக்கள் முற்றாக செயலிழந்து வெறுமனே விடுதலைப்புலிகளின் பெயரை பாவித்து தமது சொந்த நோக்கங்களை  நிறைவேற்றி கொள்பவைகளாகவே மாறியுள்ளன. 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் திருகோணமலையில் வெற்றி பெறவே முடியாமல் போன சம்மந்தன் விடுதலைப்புலிகளிளால் 2001 இல் மேற்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தால் எதிர்க்கட்சி தலைவர் வரை வளர்ந்து இருக்கிறார். அத்தகைய ஒருவரை தலைவராக கொண்ட கட்சி இன்று எமது மக்களுக்கு எதாவது பிரயோசனமாக செய்ததா என்பதை இந்த தேர்தல் வெளிக்காட்டும். முக்கியமாக கடந்த ரணிலின் ஆட்சியின்போது தமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பினை தவற விட்டு வெறுமனே அவரது முட்டுக் கொடுத்து வந்தமையை மக்கள் மறக்கப் போவதில்லை.



தேர்தலில் தற்போதய அரசின் மறைமுக ஆதரவுடன் போட்டியிடும் விடுதலைப்புலிகள் காலத்தில் துரோகிகளாக கருதப்பட்ட டக்லஸ், பிள்ளையான், கருணா  போன்றோர் இந்த தேர்தலில் தவிர்க்க முடியாத தரப்பாக மாறியுள்ளனர். இவர்கள் மீதான கப்பம் ஆட்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு  வெளியே வடக்கில் டக்லஸ் தேவானந்தாவால் மேற்கொள்ளப்பட்ட வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்திகளும்    கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக  பிள்ளையான் இருந்த காலத்தில் செய்த அபிவிருத்திகளும் இன்றும் பேசப்படுபவை. இவர்களுக்கு உரிய பலன் நிச்சயம் வாக்குகள் வழியே கிடைக்கத்தான் போகிறது.



தற்போது தம்மை கூட்டமைப்புக்கு மாற்று என்று கூறிவரும் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தரப்பினை எடுத்துக் கொண்டால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல இளைஞர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியதாக விக்னேஸ்வரன் மீதும் நுண் கடன் வழங்கும்  நிதி நிறுவனத்தில் பாரிய முதலீட்டினை மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் மீதும் கூட்டமைப்பினால் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இவை முற்று முழுதாக மறுக்க முடியாதவை. ஆயினும் கூட்டமைப்பின் தம்மை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஏக போக போக்குக்கு இப்போதய நிலையில் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் போன்றவர்களையும்  பாராளுமன்றம் அனுப்புவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.


புதிதாக எதுவும் தேவையில்லை வன்னியில் இம்முறை மொட்டு சின்னம் சார்பில் தேர்தலை எதிர் கொள்ள ரத்னபிரிய பந்துவுக்கு இவ்வளவு நம்பிக்கை வந்துள்ளது என்பது எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வாறு எல்லாம் மக்களை எமாற்றி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சியாகும். இவரால் எதனையும் சாதிக்க முடியாமல் போனாலும்  கிளிநொச்சியில்  கேடய சின்னத்தில் போட்டியிடும் சந்திரகுமார் தரப்பு கணிசமான வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அம்பாறையில் கடும் துரோகியாக பார்க்கப்பட்ட கருணா புலிகளின் தலைவரின் படத்தை காட்டியும் போரில் தான் புரிந்தாக கூறப்பட்ட வெற்றிகளையும் காட்டி இன்று வாக்கு கேட்கிறார். கருணாவால் வெற்றி பெற முடியாவிடின் அம்பாறையில்  தமிழ் ஆசனமே  இல்லாது போகும் நிலை வருமளவுக்கு  காலம் மாறியுள்ளது. மட்டக்களப்பிலும் பிள்ளையான்  தரப்பு கணிசமான வாக்குகளை பெறும் என்றே நம்பப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை  தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் வீழ்ச்சி முக்கியம் என்றாலும் அவர்களை முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்னமும் பல வருடங்களுக்கு தொடரப் போகும் ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான  தேசிய அரசியலில் சுமந்திரன் போன்றோரின் பங்களிப்பு இன்னமும் அவசியமாகும் ஒன்றாகவே காணப்பட போகிறது. 


வெறுமனே தேசியம் உரிமை என்ற உப்புச்சப்பில்லாத கதைகளை கூறி வாக்கு கூறும் இந்த தரப்புக்கள் எவரும் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். மக்களை பட்டினி கிடக்கச் சொல்லி விட்டு தாம் புரியாணி சாப்பிடும் தரப்புக்களாகவே எல்லா  அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஆகவே இதனை உணர்ந்து மக்கள் தமது வாழ்வை முன்னேற்றிக் கொள்ள வழி பார்க்க வேண்டும்.  இந்த தேர்தலில் நிச்சயமாக இடம்பெறப் போகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசன குறைவு  நிச்சயம் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு மாற்றத்துக்கு வழி சமைக்கும் என்பது எனது  நம்பிக்கை.


No comments:

Post a Comment