Saturday, September 15, 2012

சங்கக்காரவின் 2011 கவுட்றி விரிவுரை முதல் பாதி

இன்றைய தினம் நடைபெற்ற ஐ.சி.சி விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த வீரர், வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் , மற்றும் மக்களின் தெரிவு விருது ஆகியவற்றை வென்ற குமார் சங்கக்கார, MCC இல் வருடா வருடம் இடம்பெறும் COWDRY LECTURE ஐ கடந்த ஆண்டு வழங்கி இருந்தார். இது ஜூலை மாதம் 5ம்திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் தோல்வியை அடுத்து அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிய இவரது உரை நாடளாவிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. இதனால் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக சங்ககாரவிடம் விளக்கம் கேட்க முற்பட்டமையும் அதே நேரம் நாட்டின் ஜனாதிபதி,பாதுகாப்பு செயலாளர் முதலியோர் தமது பாராட்டுகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் பாதி இது.




அந்த அறிமுகத்திற்காக தலைவருக்கு நன்றி. என்னுடைய பந்துவீச்சு பற்றி நான் சொல்வதானால் எனது முதல் பந்தை காலியில் வீசினேன். அது இரண்டாம் சிலிப்பில் நின்ற அணித்தலைவரது தாடையை தாக்கியபோது என் திறமை மேல் இருந்த நம்பிக்கையை அவர் இழந்தார்.
தலைவர் அவர்களே, பிரபுமார்களை, சீமான்களே சீமாட்டிகளே, முதலில் இந்த வாய்ப்பையும் 2011 ம் ஆண்டின் கவுட்றி விரிவுரையை ஆற்றக்கூடிய மிகப்பெரிய கௌரவத்தையும் எனக்கு வழங்கிய எம்சிசி ற்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விரிவுரையை மேற்கொள்ள நான் விரும்புவேனா என்பதை அறிய சீ.எம்.ஜே என்னுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்ற தகவலை எனது முகாமையாளர் தெரிவித்தபோது உலகக்கிண்ண போட்டிகளையடுத்து நான் இந்தியாவில் இருந்தேன். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒருநாள் தொடரின் இடைநடுவில் இருக்கும்போது இதை செய்ய வேண்டிவரும் என்பதால் ஆரம்பத்தில் நான் தயங்கினேன். ஆயினும் சில யோசனைகளுக்கு பிறகு இந்த அழைப்பை நான் நிராகரிக்கக்கூடாது என்பதை உணர்த்து கொண்டேன். இந்த அழைப்பினை பெற்ற முதல் இலங்கையன் நானாவேன் என்ற வகையில் இது எனக்கு மட்டுமல்லாது எனது நாட்டவர்களுக்கும் கிடைத்த கௌரவமாகும்.

அடுத்து எனது தலைப்பை தெரிவு செய்ய வேண்டி இருந்தது. நான் நினைக்கிறேன் இன்று முக்கிய விடயங்களாக விவாதிக்கப்படும் தொழில்நுட்பத்தின் பங்கு, விளையாட்டின் நிர்வாகம், டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம், விளையாட்டின் சாபமான ஊழல் முக்கியமாக ஆட்ட நிர்ணயம் என்பவற்றில் ஒன்றை பற்றி நான் பேசுபொருளாக தெரிவு செய்வேன் என உங்களில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பீர்கள். இவை எல்லாமே முக்கியமானவைதான், கிரிக்கெட்டில் தீவிர பற்றுக்கொண்ட கிரிக்கெட்டின் மகான் கொலின் கவுட்றி இவை எல்லாம் பற்றி திட்டமான எண்ணத்தை கொண்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது.
இங்கு நான் குறிப்பிட வேண்டும் என்னுடைய கருத்தும் அதுதான். விளையாட்டின் வரலாற்றில் முக்கிய நிலையை நாம் அடைந்துள்ளோம் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆதரித்தல்,தொழில்நுட்பத்தை விருப்புடன் அரவணைத்துச் செல்லல், விளையாட்டின் உலகளாவிய நிர்வாகத்தை குறுகிய மனப்பாங்கில் இருந்து பாதுகாத்தல், ஊழலை தீவிரமாக களைந்தெடுத்தல் முதலியவற்றை மேற்கொள்ளாவிட்டால் கிரிக்கெட்டின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும். எனிலும் இவையெல்லாம் சுவாரசியமான தலைப்புகளாக உள்ள போதும் என்னுடைய ஆழ்மனதில் உள்ள கதையை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். இலங்கைக் கிரிக்கெட்டின் கதை, நான் நிச்சயமாகக் கூறுகிறேன் கொலின் கவுட்றி சந்தோசமாக இந்தப் பயணத்தை அனுபவித்திருப்பார் ஏனெனில் உலகில் உள்ள கிரிக்கெட் விளையாடும் எந்த ஒரு நாடும் எம்மைப்போல கிரிக்கெட்டை தனியே விளையாட்டாக பார்க்காது அதை விட அதற்கு கூடுதலாக முக்கியமளிப்பதில்லை.
விரிவுரை முழுவதும் விளையாட்டின் தாற்பரியம் பற்றியது மேலும் இந்த விடயத்தில் இலங்கை கிரிக்கெட்டின் கதை கவரத்தக்கது. இலங்கையில் கிரிக்கெட் தனியே விளையாட்டாக மட்டும் காணப்படவில்லை; வேடிக்கைக்கான வழியாகவும் ஒற்றுமைக்கான விசையாகவும் இது விளங்கியது. எமது சமுதாயத்தின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படும் இடத்தை இது பிடித்துள்ளது.

மிகக்குறுகிய காலப்பகுதியில் ஒரு அந்நிய விளையாட்டு நாட்டின் முழுக்கவனத்தையும் தன்பால் ஈர்க்கக்கூடியதாக மாறி விளயாடப்படுவதுடன் அதன்பால் தீவிர அன்பையும் வெறியையும் கொண்டு பின்பற்றப்படுவது ஒரு வியப்பூட்டும் விடயமாகும். இந்த விளையாட்டு நாட்டை முழுமையாக செயலிழக்க வைத்துள்ளதுடன் அற்ப அரசியல்,யுத்தம் ஆகிய எல்லைகளைக் கடந்து பலம் மிக்கதாக விளங்குகிறது. எனவே இன்றைய இரவு இலங்கை கிரிக்கெட்டின் தாற்பரியம் பற்றி பேச வேண்டும் என நான் முடிவு செய்தேன்.
சீமான்களே சீமாட்டிகளே எனது நாடு 2500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. அழகிய தீவாக இயற்கை வளங்கள் நிறைந்து இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவமான அமைந்துள்ளது. இது உலகின் கவனத்தை எமக்கு பாதகமாகவும் உள்ளதாகவும் செழிப்பினைத் தரத்தக்கதாகவும் இருக்கத்தக்க விதத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது அழகுமிக்கது இந்த அழகை சிறப்பாக வளப்படுத்தி கையாளக்கூடிய ஊக்கம் நிறைந்த விருந்தோம்பல் பண்பு வாய்ந்த மக்களைக் கொண்டது. இவர்களின் வாழ்க்கைக்குரிய மனப்பாங்கு உள்நாட்டு,வெளிநாட்டு அரசியலுக்கு ஏற்ப மாறக்கூடிய விதத்தில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது வரலாற்றில் நீங்கள் உன்னதமான சமாதானமும் செழிப்பும் நிறைந்த காலப்பகுதியையும் கடும் மோதல்,யுத்தம், வன்முறை நிறைந்த காலப்பகுதியையும் காணமுடியும். அனுபவத்தின் மூலம் இலங்கையர்களின் மனம் உறுதியான நிலையை அடைந்துள்ளதுடன் தம்மை ஈடுகொடுக்கக்கூடிய வகையில் வாழ்க்கைக்கும் வாழ்வதற்கும் ஊக்கமளிக்கக்கூடிய வகையில் பெருமையுடன் கொண்டாடுபவர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இலங்கையர்கள் நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டதோர் சமுகமாகும். குடும்பத்தின் வலிமை எமது சமூகத்தவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றது. நாங்கள் அறிவார்வம் கொண்டவர்கள். வாழ்க்கையின் சிக்கல்களின் போது அதை எதிர்த்து சவால்விடக்கூடியவாறு புன்னகை புரியக்கூடியதாகவும் செல்வச்செழிப்பை கொண்டாடும் காலப்பகுதியில் அதனை ஆடம்பரமாக கொண்டாடுபவர்களாகவும் உள்ள வேடிக்கையை விரும்பும் மக்களுமாவோம். நாங்கள் வாழ்வது நாளைக்கல்ல இன்றைக்கே, அன்றாடப்பிழைப்பின் ஒவ்வொரு மூச்சையும் அனுபவிப்பவர்கள். நாங்கள் எமது பாரம்பரியம்,கலாசாரம் காரணமாக நிறைந்த பெருமையைக் கொண்டவர்கள், சாதாரண இலங்கையரில் அந்த அறிவு இருப்பதால் நிமிர்ந்து நிற்கக் கூடியதாக இருக்கின்றது.
நானூறு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேயரின் காலனித்துவத்தினால் எமது தளர்வுறாத ஜீவநாடியை நசுக்கவோ அடக்கி வைக்கவோ முடியவில்லை.அப்படி இருந்தும் அன்மைக்காக வரலாற்றிலும் சமூகத்திலும் கிரிக்கெட் விளையாட்டினை அறிமுகப்படுத்தி எமது வரலாற்றின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலை காணப்பட்டமை வியப்புக்குரிய குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையர்களிடத்தே எமது சமுதாயத்தில் நூற்றாண்டு காலமாக காணப்படும் ஐரோப்பியவாதத்துக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு நிலவியது. அக்காலப்பகுதியில் மேற்கத்தேய பாரம்பரியமும் செல்வாக்கும் கெடுதியாக கருதி வெளியேற்றும் நிலை இருந்தது.


இருந்தும் ஒருவழியாக கிரிக்கெட் மேற்கத்திய எதிர்ப்பு வாதங்களில் உள்ள பிளவுகளின் ஊடாக தப்பியதுடன் பிரித்தானிய காலனித்துவ உடைமையின் மிகப் பெறுமதி வாய்ந்த சொத்தாக மாறியிருக்கிறது. எம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து விருந்தினரை உபசரிக்கும் போது சிலநேரங்களில் எம்மிடம் இல்லாதவற்றையும் கொடுத்து உபசரிப்பது போன்ற எமது சாதாரண விருந்தோம்பல் பண்பினால் இது ஏற்பட்டிருக்கலாம்.


இலங்கையில் உள்ள கிராமப்புற வீட்டுக்குச் சென்றால் நீங்கள் தேநீர் கோப்பையினால் உபசரிக்கப்படுவீர்கள் நீங்கள் அதில் மிகுந்த இனிமையை காணுவீர்கள். சில சமயங்களில் இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதலாக விசாரித்த போது விருந்தாளி சீனி உட்பட எல்லாவகையிலும் உபசரிக்கப்பட வேண்டும் என வீட்டுக்காரர் நம்புதல் இதற்குக் காரணம் என அறிந்தேன். சீனி ஆடம்பரப் பொருளாக கருதப்படும் வீடுகளில் விருந்தினர் சீனியுடன் கூடிய தேநீர் குடிக்கும் போது வீட்டுக்காரர் சீனி இல்லாமல் தேநீர் குடிக்கும் நிலை காணப்படுகிறது.
நடந்ததை இணைத்துப்பார்க்கையில் கொலின் கவுட்றிக்கும் இலங்கையின் கிரிக்கெட் மீதான காதலுக்கும் ஒரே மூலமே உள்ளது, தேயிலை. கொலினின் தந்தையான ஏனஷ்ட் இந்தியாவில் தேயிலை தோட்ட உரிமையாளராக இருந்தார். அவர் இங்கிலாந்தில் படிக்கும் போது தனது தந்தையின் தோட்டத்தில் விளையாடுவார். அவர் தன்னை விட வயதில் மூத்த இந்திய பையன்களுடன் இணைத்து பயிற்சி பெற்றதாக நான் அறிந்தேன். 1976 முதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் வரையான காலனித்துவ ஆட்சியின்போது ஏனஷ்ட் போன்ற தோட்ட உரிமையாளர்களால் இலங்கையில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
காலனித்துவ அரசாங்கத்தால் கல்வி நிலையங்களை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக விட்டுச்சென்ற அன்கிலிக்கன் மிசனரிமாருக்கும் இலங்கையில் கிரிக்கெட்டினை உருவாக்கிய பெருமை சென்றடையவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரைப்பகுதியின் இறுதியில் காலனித்துவ அரசாங்கத்தால் திறந்து விடப்பட்ட வணிகரீதியான வாய்ப்புகளினூடாக செல்வத்தை பெருக்கிகொண்டதன் மூலம் பெருமளவான இலங்கைக் குடும்பங்கள் வளர்ச்சியுற்றன. இருந்தும் இந்த குடும்பங்களில் பெரும்பாலானவற்றினால் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தினை பெற முடியவில்லை. நாட்டிலே காணப்படும் சாதிப்படிமுறைக்கு வழங்கப்படும் முன்னுரிமை இதற்குத் தடையாக விளங்கியது. ஒருவர் உயிர்வாழும் வரை அவர் பிறந்த சாதியின் முத்திரை அவர் மீது குத்தப்பட்டிருக்கும். எனவே இந்த சாதி அமைப்பில் இருந்து தப்புவதற்கான வழிமுறையாக பிரித்தானிய முடிக்கு விசுவாசமாக இருந்து அவர்களின் மத்திய ஆட்சிக்கு உதவுதல் விளங்கியது.
இந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் கணித்த மிசனரிமார் சகல இனங்கள், சாதிகள், சமயங்களை சேர்ந்த வசதி படைத்த மாணவர்களுக்காக உயர்தரமான பணத்தினை அறவிடும் ஆங்கிலப் பாடசாலைகளை ஆரம்பித்தனர். முக்கியமாக கொழும்பில் அவற்றைத் தொடங்கினர். ”கிரிக்கெட் இன்றி நாட்டில் கோடை இல்லை” என நெவில் கார்டஸ் கூறுவதற்கமைய ஏற்கனவே ஆங்கிலேயரின் வாழ்கையில் ஆழமாகப்பதிந்த கிரிக்கெட் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கல்வி முறையில் தானகவே அறிமுகப்படுத்தப்பட்டது.


கிரிக்கெட், விளையாட்டு மைதானங்கள், உபகரணங்கள், பயிற்றுவிப்பாளர்கள் என்பன தேவைப்படும் செலவுமிக்க விளையாட்டாகும். பிரித்தானிய மிசனரிமார் இத்தகைய சில பாடசாலைகளுக்கு மட்டுமே அத்தகைய சகல வசதிகளையும் அளித்தார்கள். இந்த ஆங்கிலேயப் பாடசாலை முறையின் உடனடி வெற்றியாக கிரிக்கெட் மாறியது. பெரும்பாலான இலங்கையர்கள் கிரிக்கெட்டினை தாம் அடையமுடியாத ஒன்றாகக் கருதினார்கள் ஏனெனில் இது வசதி படைத்த சலுகையை கொண்டிருந்த பாடசாலைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது


இதன் காரணமாக மிசனரிமார் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளை ஏற்பாடு செய்து அதனை பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வார இறுதி சமுக நிகழ்வாக மாற்றினார்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் அனைத்து போட்டிகளின் விடயங்களையும் பத்திரிகைகள் தாங்கியிருந்தன. இதன் விளைவாக பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வீட்டில் பயன்படும் பெயர்களாக மாறின. அத்துடன் இவை இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட்டின் முக்கிய தகவல்களையும் தந்தன எனவே பொதுவாக இலங்கையர்கள் இங்கிலாந்தின் கிரிக்கெட் பற்றி அவர்களை விடக் கூடுதலாக அறிந்துள்ளனர் எனக்கூறப்படுவதுண்டு.
கிரிக்கெட் கழகங்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. இவை செல்வந்தப்பாடசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் தேவைக்காகவே உருவாக்கப்பட்டன. இத்தகைய கழகங்கள் சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ் யூனியன், பெகர்ஸ் ரிக்கிரியேசன், மூவர்ஸ் கிளப் போன்ற இனத்துவப் பெயர்களைக் கொண்டிருந்தன. எனினும் ஒட்டுமொத்தமாக நாம் நோக்கினால் இவையாவும் ஒரே மாதிரியான அன்கிலிக்கன் திருச்சபையின் பண்புகளையே கொண்டிருந்தன.
கழகங்களுக்கு இடையிலான போட்டிகள் முழுவதும் சந்தோசத்துக்காகவே விளையாடப்பட்டன. மேலும் இது உள்நாட்டவர்கள் பிரித்தானியர்களுடன் சமூகமயமாக கலப்பதற்குரிய வாய்ப்புகளையும் திறந்து விட்டது. எனவே 1948ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரமளித்த போது உயர் சமுகத்தவர்களின் உணர்வாகக் கிரிகெட் காணப்பட்டதில் வியப்பேதும் இல்லை. சுதந்திரத்துக்கு மிகக்கிட்டிய காலப்பகுதியில் அங்கிலிக்கன் உயர் சமூகத்தவர்கள் சிறுபான்மையானோராக இருந்த போதிலும் அவர்கள் மேலைத்தேய சார்பு அரசியல் கோட்பாட்டை உடைய பலம் வாய்ந்த அரசியல் சமூகமாகவே எஞ்சியிருந்தார்கள். சுதந்திரத்தை தொடர்ந்து இடம்பெற்ற தேர்தல்களில் உயர் சமுதாயத்தினை சேர்ந்த அரசாங்கங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அரசுக்குத் தலைமை வகித்த மூன்று பிரதமர்கள் எஸ்.எஸ்.சி கழகத்தின் உறுப்பினர்களாகவும் முன்னணி செல்வந்த பாடசாலைகளில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களாகவும் விளங்கினர்.
1960ற்கும் 1981 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியானது விளையாட்டின் பிரபல்யத்தின் மெதுவான வளர்ச்சியைக் கொண்ட காலப்பகுதிகளில் ஒன்றாகும்.அதிகாரமானது உயர் அன்கிலிக்க சமுகத்தவர்களிடமிருந்து சமுக தேசிய குழுக்களுக்கு மாறியமை இதற்குக் காரணமாக அமைந்தது. இருந்தபோதும் 1965 ல் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக மதிக்கப்படும் மைக்கல் திஸ்ஷோர, அனுர தென்னக்கோன் போன்றவர்களுடன் இணைந்து பெற்றுக்கொண்டது.1981ல் ஐ.சி.சி இலங்கைக்கு உத்தியோகபூர்வ டெஸ்ட் அந்தஸ்தினை வழங்கியது.இதற்குரிய முயற்சிகளை மேற்கொண்ட மறைந்த மதிப்புக்குரிய காமினி திசாநாயகவிற்கு நன்றிகள்.இது வெளிப்படையாகவே எமது கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய காலமாக விளங்கியதுடன் செல்வந்தர்களின் விளையாட்டில் இருந்து சாதாரண மக்களுக்குரிய விளையாட்டாக கிரிக்கெட்டை மாற்றமடையச் செய்த காலப்பகுதியின் தொடக்கமாகவும் விளங்கியது.


இந்த முக்கியமான சம்பவத்தினை ஒரு சிறுவன் என்ற வகையில் என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. இதற்கான காரணம் எனக்கு ஐந்து வயதாக இருந்தமை இதற்குக் காரணாமாக இருக்கலாம் அதே சமயம் எனது வீட்டின் உரையாடல்களில் இது முக்கிய விடயமாக அமையவும் இல்லை . 1980 களின் ஆரம்பகாலப்பகுதி தீவிரமான ராணுவ நடவடிக்கைகளால் வடக்கு முக்கியம் பெற்றதுடன் இது முழுஅளவிலான யுத்தத்துக்கு இட்டுச்சென்று அது அடுத்துவரும் 30 ஆண்டுகளையும் பாதித்திருந்தது.


1983ன் பயங்கர இனக்கலவரமும் இளைஞர்களின் கம்யுனிச கிளர்ச்சியும் எனது இளமைக் கால நினைவுகளையும் அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையையும் இருளடையச்செய்திருந்தன. இப்போது நான் 1983 இனக்கலவரத்தை பயத்துடன் நினைத்துப்பார்க்கிறேன் ஆனால் ஆறு வயது குழந்தையின் சாதாரண நினைப்புக்கு அது தொடர்ச்சியான விளையாட்டுக்கும் குதூகலத்துக்குமான நேரமாக இருந்தது. இதை நான் சாதாரணமானதாகச் சொல்லவில்லை சுமார் சுமார் 35 எமது நெருங்கிய நண்பர்களான தமிழர்கள் எமது வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அரசியல் ரீதியாக ஊக்கிவிக்கப்பட்ட கொடூர காடையர் குழுக்களிடமிருந்து மேற்படி தமிழ் நண்பர்களுக்குப் புகலிடம் தேவைப்பட்டது. எனது அப்பாவும் அவரைப் போன்ற பலதரப்பட்ட வேறுபட்ட இனங்களைப் பின்னணியாக கொண்ட எனைய இலங்கையர்களும் தமது தனிப்பட்ட அபாய வாய்ப்புகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டோருக்கு தமது வீடுகளில் தஞ்சம் வழங்கினர் .
என்னைப்பொறுத்தவரை சூழ்நிலை எவ்வாறு இருப்பினும் எனது எல்லா நண்பர்களுடனும் சேர்ந்து நாள் முழுவதும் விளையாடினோம். பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தன, நாங்கள் நாள்பூராவும் பின்புறத்தில் விளையாடப்படும் கிரிக்கெட்,உதைபந்தாட்டம்,ரவுண்டேர்ஸ்போன்ற விளையாட்டுகளை மணிக்கணக்கில் விளையாடினோம். சிறு பிள்ளையின் கனவு நனவாகும் நேரமாக அது இருந்தது. எங்களது விளையாட்டுக்களுக்கு பெற்றோரால் இடையூறு விளைவிக்கப் பட்டபோது நான் எரிச்சலடைந்ததை நான் ஜாபகப்படுத்த முடியும். நாங்கள் மாடிப்படிகளில் ஒளிந்து கொண்டதுடன் காடையர் கும்பல் அயலவர் வீடுகளில் தேடுதலை ஆரம்பித்தமையினால் சத்தம் செய்யாது இருக்குமாறு பெற்றோரால் கேட்கப்பட்டோம்.
எனது நண்பர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஏற்படும் பயங்கர விளைவை நான் உணரவில்லை. “ இது ஒவ்வொரு வருடமும் நடக்கவேண்டும் ஏனென்றால் இது எனது நண்பர்களுடன் சேர்ந்து குதூகலத்தினை ஒவ்வொரு நாளும் அனுபவிக்க கூடியதாக இருக்கின்றது” என அந்த காலப்பகுதியில் ஒருநாள் நான் அப்பாவிடம் அப்பாவித்தனமாக சொன்னதாக ஒரு நாள் அப்பா எனக்கு நினைவுபடுத்தியிருந்தார்.
1980 களின் இறுதிப்பகுதியில் எமது பல்கலைக்கழகங்களில் இருந்து உருவாகிய ஜேவீபி தலைமையிலான கம்யுனிச கிளர்ச்சி இதற்கு இணையாக அச்சமூட்டும் விதத்தில் காணப்பட்டது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டிருந்தன.மாலையில் மக்கள் அரிதாகவே வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.கருகிய உடல்களை வீதிகளிலும் மிதக்கும் சடலங்களை ஆறுகளிலும் காணும் திகிலூட்டும் அசாதாரண நிலை காணப்பட்டது. ஜேவீபி ற்கு எதிரான மக்கள் மோசமான விளைவுகளை எதிர் கொண்டார்கள். அனைத்துப் பாடசாலைகளின் மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தமது நோக்கத்திற்கு அதரவாக அணி திரளத் தூண்டப்பட்டர்கள். அதிஷ்டவசமாக நான் திரித்துவ கல்லூரியில் இருந்தேன். அவர்களது அதிகாரத்திற்கு எதிராக செயற்ப்பட்ட ஒரு சில கல்லூரிகளில் .இதுவும் ஒன்றாகும்.இன்னமும் நான் தர்மராஜா கல்லூரிக்கு சற்று கீழே வசித்தமையினால் அதன் வாயிற் கதவுகளால் வெளிவரும் மாணவர்கள் கண்ணீர்ப்புகையினை எதிர்கொண்டு, மலைக்குக் கீழே எனது வீட்டு தோட்டத்தின் குழாயின் நீரால் தமது கண்களை கழுவுவதற்கு ஓடி வருவதை நான் பார்ப்பதுண்டு.
என்னுடைய முதலாவது கிரிக்கெட் பயிற்சியாளர் திரு டி.ஏச்.டீ.சில்வா ஒரு நல்ல மனிதர். அவர் கிரிக்கெட் டென்னிஸ் ஆகியவற்றை மாணவர்களுக்கு கட்டணம் இன்றி பயிற்றுவிப்பவர். தனது டென்னிஸ் அரங்கில் அவர் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். அடிவயிற்றுப் பகுதியில் இரு முறை தாக்கிய போதும் அவருடைய தலையில் வைத்த துவக்கு செயற்படாமையால் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அக் காலப்பகுதியிலும் அதன் பின்னரும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற பலரைப்போல அவரும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தனது புதிய வாழ்கையை அவுஸ்ரேலியாவில் ஆரம்பித்தார்.
தசாப்தங்கள் பல கடந்த போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சண்டை முழுமையான யுத்தமாக மாறியது. இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதிகளுடன் மேற்கொண்ட யுத்தம் எமது நாட்டின் பொருளாதாரத்தை பல தசாப்தங்களுக்கு பின் தள்ளியது.. இந்த யுத்தம் எமது முழு நாட்டையும் பல விதங்களில் பாதித்தது. பெரும்பாலும் குறைந்த வருமானத்தை பெறும் வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் தமது இளம் ஆண்களையும் பெண்களையும் இலங்கை இராணுவத்துக்கு தியாகம் செய்தார்கள். கொழும்பிலும் கூட, வர்த்தகத் தலைநகர் என்ற வகையில் யுத்தமுன்னரங்கிலிருந்து நீண்ட துரத்தில் இருக்கின்ற போதும் சக்தி வாய்ந்த வாகனங்களையும் தற்கொலைக்குண்டுதாரிகளையும் பயன்படுத்துவதன் மூலம் பயங்கரவாதிகளின் முற்றுகைக்குக் கொழும்பு உட்பட்டிருந்தது. பொது இடங்களில் பொதுமக்களை இலக்காகவும் அரசியல்வாதிகளை இலக்காகவும் கொண்ட குண்டுகள் இலங்கையில் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஆபத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. பெற்றோர்கள் வேலைக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் போது பிரிந்தே சென்றார்கள்.எனவே அவர்களில் ஒருவர் இறந்தாலும் மற்றவர் வீடு திரும்பி குடும்பத்தினை கவனித்து கொள்ளக் கூடியதாக இருந்தது .ஒவ்வொரு இலங்கையனும் கொடிய மோதலினால் பாதிக்கப்பட்டிருந்தான். அரசியல், அதிகாரம், யுத்தம் காரணமாக மக்கள் விரக்தியுற்றிருந்தார்கள். நம்பிக்கையற்ற எதிர்காலம் காரணமாக அவர்கள் பீதியுடனே வாழ்ந்தனர். வன்முறை வட்டம் தொடர்ந்தது. இலங்கை அதனது யுத்தத்தினாலும் முரண்பாடுகளாலும் சர்வதேசரீதியில் பிரபல்யம் அடைந்தது.
இது ஒரு மோசமான தருணம், ஒரு நாடு என்ற வகையில் எழுச்சியை எதிர்பார்த்திருந்த தருணம். ஒரு நாடக நாங்கள் ஒன்றுபட்டால் எவ்வளவு திறமையானவர்கள் என்பதனை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. நம்பிக்கை என்னும் கலங்கரை விளக்கு எமது மக்களின் ஆற்றலை ஒளிரச் செய்ய இருந்தது. அந்த தூண்டுதல் 1996ல் எதிர்பார்க்கப்பட்டது.
1995ற்கு முற்பட்ட காலத்தில் இலங்கை பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியிருந்தது எனினும் இலங்கையில் கிரிக்கெட் விளையாடும் விதத்தில் காலனித்துவத்தால் திணிக்கப்பட்ட செல்வாக்கினை உடைக்க முடியவில்லை. 1981ல் இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொண்ட போதும் இலங்கை கிரிக்கெட்டின் தனித்துவ அடையாளத்தை வெளிக்காட்டுவதில் தடுமாறியது. நாங்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தில் “இலங்கையன்” என்னும் முறை பெரிதாகக் காணப்படவில்லை. இருந்தும் சில விதிவிலக்குகள் காணப்பட்டன.ஒருவர் அதிகம் பேசப்படும் சதாசிவம்.மைதானத்திலும் அதற்கு வெளியிலும் அவர் ஒரு நம்பிக்கையான துடிப்பான கிரிக்கெட் வீரர்.அவரது கையில் துடுப்பு உள்ள போது அது மந்திரக்கோலை போன்றது எனக் கூறுவர்.மற்றுமொரு தனித்துவமான துடுப்பாட்டக்காரர் துலிப் மென்டிஸ்,தற்போதைய எமது பிரதம தேர்வாளர். ஒரு வீராப்பு மிக்க வீரனாக அவர் துடுப்பெடுத்தாடினார்.


பொதுவாக நாங்கள் புத்தகத்தில் உள்ளபடி பழைய முறைகளை பின்பற்றி, ஆரம்பகால கிரிக்கெட் ஜாம்பவான்களின் வழக்கமான முறைகளைத் தழுவி விளையாடினோம். எமது சொந்த அடையாளத்திற்கு பலம் சேர்க்கும் சந்தர்ப்பத்திற்காக விளையாடும், அதிஷ்டத்தின்படி மகிழும் தருணம் அப்போது இருக்கவில்லை.எங்களிடம் போட்டி மிக்க அணி அதற்குரிய வீரர்களுடன் இருந்தது. எனினும் நாங்கள் துணிவற்றவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இன்னமும் எமது சொந்தப் பெறுமதியை தனிப்பட்ட வீரரகவோ அல்லது ஒரு அணியாகவோ முழுவதும் நம்பாதவர்களாகவே இருந்தோம். என்னைப்பொறுத்தவரை நாங்கள் பல வழிகளிலும் பார்க்கும்போது ஆரம்பகால மேற்கிந்தியதீவுகள் அணிகள், கலிப்சோ கிரிக்கெட் வீரர்கள் போல இருந்தோம். அவர்கள் விளையாட்டை வேடிக்கையானதாக விளையாடி அதில் நேர்த்தி இருப்பினும் வெல்வதை விட பலவற்றை தோற்றார்கள்.அந்த நேரத்தில் எமக்கு தேவைப்பட்டவர் ஒரு தலைவர். அந்தக்கூட்டத்தில் இருந்து திறமையுடைய சகல தகுதிகளையும் கொண்ட குணவியல்பும் ,துணிவுடன் வழக்கத்தினை மாற்றக்கூடிய, வாய்ப்பற்ற கலாச்சாரத்திலும் பழக்கங்களிலும் நிலைக்கக்கூடிய பயமற்ற தன்னை எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார்.
இந்த நீண்ட காத்திருப்புக்கு,மிகச்சிறந்த திறமையும் கொண்ட சற்று பருத்த அர்ஜுன ரணதுங்க என்னும் வடிவில் மீட்பவர் வந்தார்.எங்களுடைய கிரிக்கெட்டின் முழு வரலாற்றுப் பாரம்பரியத்தையும்,நாங்கள் விரும்பும், 20 மில்லியன் மக்களால் தமது சொந்த கனவாக பின்பற்றப்படும் ஒன்றாக மாற்றுவதற்கு அவர் வந்தார்.
அர்ஜுனவின் தலைமைத்துவம் இக்காலப்பகுதியில் உலகளாவிய சக்தியாக எம்மை வெளிப்படுத்துவதற்கு முக்கியதத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இது தான் அர்ஜுனா, ஏன் நாங்கள் பழைய காலனித்துவ விலங்கினை உடைத்து புதிய அடையாளத்தினை உருவாக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக அறிந்திருந்தவர். அந்த அடையாளம் இலங்கையின் தரத்தில் இருந்து உருவாகியது, சாதாரண இலங்கையர்களின் ஆர்வம், அதிர்வு, உணர்வு என்பவற்றின் மூலம் வலுவூட்டப்பட்ட அடையாளம்.
இலங்கையின் விளையாட்டில் அந்நிய வழமைகளை உடைத்து இலங்கையின் முறையிலான புதிய கிரிக்கெட்டினை உருவாக்கியதன் மூலம் அர்ஜுனா தனது சொந்தப் புள்ளியை பதித்திருந்தார்.ஆனந்தா கல்லூரியில் இருந்து எஸ்.எஸ்.சி ற்கு வந்தமை அவருக்கு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தது. எஸ்.எஸ்.சி அல்லது சிங்களவர் விளையாட்டு கழகம் சென்தோமஸ்,றோயல் ஆகிய கொழும்பில் உள்ள இரு செல்வந்த பாடசாலைகளின் அதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. கழகத்தின்செயற்குழு,அங்கத்துவம்,அணியின் கூறுகள் கூட இந்தப்பாடசாலைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
ஒரு வித்தியாசமான சூழலை சமாளித்து அதனுடன் பொருந்திக்கொள்ளுதல் எவ்வளவு சிரமமானது என அர்ஜனா சொல்லியிருந்தார். 15வயது பாடசாலை சிறுவனாக அவர் கழகத்தில் வலைப்பயிற்சி செய்யும்போது கழகத்தின் சிரேஷ்ட தூணான வீரன் அவரைப்பற்றி விசாரித்தார்.அவர் சாதாரண ஆனந்தா கல்லூரியில் இருந்து வந்ததாக கூறியபோது அந்த வீரர் சாரங்கட்டிய எவனும் இந்தக்கழகத்திற்கு தேவையில்லை எனக்கூறி அவரது தனித்துவமான திறமைகள் அனைத்தையும் ஒதுக்கினார்.
அந்த மாற்றத்துடன் அர்ஜுனா எஸ்.எஸ்.ஸி யின் தலைவராக பல ஆண்டுகள் இருந்ததுடன் செல்வந்தப் பாடசாலைகள் விளையாட்டின் மீது கொண்டிருந்த செல்வாக்கினையும் உடைத்தார்.அவரது இலக்காக தன்னப்பிக்கையை ஊட்டி அதனூடாக சுயமதிப்பினை தூண்டுவதன் மூலம் எதிரணியை சமனானதாக மதித்து எவ்வித சுய சந்தேகமோ பயமோ இன்றி பயனற்ற பழைய முறைகளை எதிர்ப்பதன் மூலம் இலங்கையின் அடையாளத்தினை மேம்படுத்தினார். அவர் அச்சமின்றி கேள்வியற்ற அதிகாரத்துடன் அணியை தலைமை தாங்கினார். ஆயினும் அமைதியான ஒன்றிணைந்த பண்பு அவருக்கு கப்டன் கூல் என்ற பெயரை பெற்றுத் தந்தது.
எமது தலைமைத்துவத்திற்கு மிக முக்கியமான அத்திவாரம் 1996 காலப்பகுதியில் இடப்பட்டது. சற்றுப் பருத்த இடதுகைகார சிறந்த தலைவனை இலங்கை கொண்டிருந்தது. அவர் தனது அணியை தெரிவதற்கு முதல் தடவையாக நாட்டின் எல்லா மூலைகளிலும் தேடுபவராக இருந்தார். எமக்கு ஒரு வரம்பு தேவைப்படுகிறது என்பதை அந்த நேரத்தில் மற்றைய எல்லோரையும் விட அர்ஜுனா உணர்ந்திருந்தார்.தனித்துவமான திறமைகளை கொண்டதும் அவை மெருகூட்டப்படும் போது எதிரணியை குழம்பச்செய்து வீழ்த்தக்கூடியதுமான வீரர்களை அவர் தேடினார்.
கிரிக்கெட்டில் எல்லாமே நேரம் தான்.. இலங்கை அணிக்கும் இது பொருந்தியது. எமது கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தில் மகான்களான சனத் ஜெயசூரியாவையும் முத்தையா முரளிதரனையும் வழங்கியதையிட்டு அவர்களது பெற்றோர்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
மாத்தறையில் இருந்து வந்த சனத் வறுமையான பின்புலத்தை கொண்ட மிகுந்த திறமைசாலி அந்தத் திறமை எவ்வித பயிற்சியோ வழிப்படுத்தலோ இல்லாத மூலப்பொருள். அர்ஜுனாவின் மேற்பார்வையின் கீழ் அது கிரிக்கெட்டின் முக்கிய கவசமான துடுப்பாட்ட சக்திகளில் ஒன்றாக மாறியது.
கண்டியின் மலைகளில் இருந்து வந்த முரளி செல்வந்த பின்புலத்தினை சேர்ந்தவர்.வேகப்பந்து வீச்சாளராக ஆரம்பித்து சுழலுக்கு மாறிய இவருக்கு இவரது பந்து வீசும் கையில் காணப்பட்ட இயற்கை குறைபாடு எண்ணிப்பார்க்க முடியாத கோணங்களில் சிறப்பாக சுழற்ற அனுமதித்தது. இவர் மணிக்கட்டினை சுழற்றி ஒப் ஸ்பினைக் கொண்டு வந்தார். 1990ல் இவரை எதிர்கொண்டு அவுஸ்ரேலிய ஓய்வறைக்கு திரும்பிய அலன் போர்டர் சொன்னார் “அவர் ஒரு லெக் ஸ்பின்னர் ஆனால் பல கூக்கிகளை வீசினார் “.
அர்ஜுனாவின் அணி இப்போது ஒரு நிலைக்கு வந்து விட்டதுடன் இது திறமையைக் கொண்ட கவர்ச்சியான குழாம். ஆனால் அவர்கள் ஒரு அணியாக இன்னமும் மாறவில்லை. 1996 உலகக்கோப்பை அவர்களது நீண்டகாலக் குறிக்கோளாக இருப்பினும் அவர்களுக்கு எழுச்சிகரமான நிலை தேவைப்பட்டது. ஒன்றிணைக்கப்பட்ட காரணி, அணி உணர்வை தந்து போராடுவதற்கான அந்த நிகழ்வு அணியை மட்டும் இணைக்கப் போவதில்லை அவர்களுக்குப் பொதுவான இலக்கை வழங்கியது அது மட்டுமின்றி நாடளாவிய அதரவு அணிக்கும் அதனது பயணத்திற்கும் கிடைத்தது.
இது 1995 ல் எம்.ஸி.ஜி யில் குத்துச்சண்டை தினத்தில் வந்தது. அந்த நேரத்தில் சிலர் இதனை உணர்த்திருந்தார்கள். ஆனால் பந்தை எறிவதான முரளி மீதான குற்றச்சாட்டு பல விளைவுகளை ஏற்படுத்தியது. இப்பிரச்சினை முழு நாட்டிலும் கோபத்தினை எழுப்பியது. முரளி நீண்ட காலத்துக்கு தனியாக இருக்கவில்லை அவரது வலி, அவமானம், கோபம் அனைவராலும் பகிரப்பட்டது. விமர்சனங்கள் எதுவாக இருப்பினும் அர்ஜுனாவும் அவரது அணியும் முரளிக்கு பின்னால் இருந்த விதம் முழு நாட்டையும் பெருமை கொள்ளச்செய்தது. இத் தருணத்தில் இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் “அபே கொல்லா” அதாவது “எமது பையன்கள்” என ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
ஈடுபாடின்றி போயிருந்த இலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகால ஆதரவாளர்களுக்கு அந்த இடத்துக்கு அந்த 15 பேர்களின் மீதும் புதிய அன்பு பிறந்தது. அவர்கள் எங்களது மகன்களாக எமது சகோதரர்களாக மாறினார்கள். அவர்களுடன் சேர்ந்து நின்று அவர்களது சோதனைகளையும் வேதனைகளையும் இலங்கையர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மெல்போர்னில் பந்தை எறிவதான முரளி மீதான குற்றச்சாட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் பழிவாங்காமல் விடப்படக்கூடாத அவமானமாக அமைந்தது. இது இலங்கை அணிக்கு முழுமையான ஐ.சி.சி. யின் அங்கீகாரத்தைப் பெற்று 14 ஆண்டுகளில் நினைத்து பார்க்கவேமுடியாத உலக சாம்பியனாக மாற ஊக்கமளித்த ஊக்கியாக அமைந்தது.
இந்த இடத்தில் இதனையும் குறிப்பிடுவது முக்கியமானது ,1981 வரையான காலப்பகுதியில் 80% மான தேசிய அணி வீரர்கள் செல்வந்த ஆங்கிலேய பாடசாலைகளில் இருந்து வந்தவர்களாகவே இருந்தார்கள் ஆனால், 1996 உலகக்கோப்பையை வென்ற அணிக்கு இந்தப்பாடசாலைகள் ஒரு வீரரைக்கூட அளித்திருக்கவில்லை.
உலகக்கிண்ண வெற்றியின் தாக்கம் விளையாட்டினை சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதோடு அனைத்து இலங்கையர்களாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆர்வத்தை கொண்டுவருவதற்கும் வழிவகுத்தது.முதல் தடவையாக வெளி இடங்களை சேர்ந்த பிள்ளைகளும் அரச பாடசாலைகளும் கிரிக்கெட்டினை தமக்குரியதாக்க அனுமதிக்கப்பட்டார்கள். கிரிக்கெட் அனைத்து மக்களுக்கும் திறந்து விடப்பட்டது. வெளிப்படுத்தப்படாத திறமைகளுக்கு கதவுகளை திறந்ததோடு மட்டுமின்றி விளையாட்டினை உயர் மட்டத்தில் சிறப்பாக விளையாடுவதற்கும் இது உதவியது.
இத்தகைய சாதாரண புதிய வீரர்கள் இதுவரை இலங்கை இழந்திருந்த ஆர்வத்துடன், மகிழ்ச்சியுடன், முனைப்புடன் விளையாட்டினை விளையாடும் சாதாரண இலங்கையர்களின் பண்புகளை வாங்கியிருந்தார்கள். சனத், களு ,முரளி, அரவிந்த ஆகியோரின் விளையாடும் பாங்கு ஒருநாள் கிரிக்கெட்டின் அடிப்படையை மட்டும் மாறவில்லை உண்மையான இலங்கையனுக்குரிய அடையாளமாகவும் இதனை அவர்கள் நோக்கினார்கள்.
நாங்கள் நீண்ட காலத்துக்கு பயந்து ஒதுக்குபவர்களாகவோ மென்மையானவர்களாகவோ சிறிய மீனைப்போலோ இருக்கவில்லை. உலகத்தின் சிறந்த அணியுடன் மோதி தோற்கடித்திருந்தோம். எமது தேசிய பண்புகள், ஒன்று சேர்ந்த கலாச்சாரம் ,எமது பழக்கவழக்கங்கள் என்பனவற்றை வெளிப்படுத்தி கொண்டாடுவதில் நாங்கள் ஒழிக்கவோ வெட்கப்படவோ இல்லை. இந்த விதமான கிரிக்கெட்டை எமக்கு சொந்தமானது என்பதைக்கூறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.உள்ளூர் பண்புகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருந்த இந்த முறைமை எமது எடுத்துக்காட்டான சொத்தாக விளங்கியது.உலகக்கோப்பை வெற்றி எமக்கு கிரிக்கெட் வீரர்களாக எமது சமுதாயத்தில் உள்ள இடத்தினை விளங்கிக்கொள்ள புதிய உத்வேகத்தை கொடுத்தது.
உலகக்கோப்பையின் மூலம் கிடைத்த புதிய ஆரம்பம், புதிய உத்வேகம் இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்திற்கான கனவை கட்டியெழுப்பியது. பலதரப்பட்ட பின்புலங்களை, சமயங்களை, சாதிகளை சேர்ந்த ஒவ்வொருவரும் இங்கே தமது தனித்துவம் தொடர்பாக மிகுந்த பெருமை கொண்டிருந்தார்கள். இன்னமும் அவர்கள் தனித்த அணியாக மட்டுமின்றி ஒரு குடும்பமாக ஒன்றினைக்கப்பட்டிருந்தார்கள். பொதுவான தேசிய காரணத்துக்காக போராடுவதற்காக எமது முழு சமூகத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தி உண்மையான இலங்கையன் எப்படியானவன் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியமை ஒவ்வொரு இலங்கையனுக்கும் ஒளிரும் உதாரணமாக விளங்கியது.
1996 உலகக்கோப்பை சகல இலங்கையர்களுக்கும் பொதுவான தன்மையை கொடுத்தது, ஒன்று சேர்ந்த சந்தோசத்தையும் ,எதிர்பார்ப்பையும் கொண்ட ஒரு விடயம் பிரிந்துபட்ட சமுதாயத்திற்கு உண்மையான தேசிய அடையாளத்தினை வழங்கியதுடன் சகல சமுகப்பிரச்சினைகளையும் தீர்க்கும் நிவாரணமாகவும் அமைந்தது.மேலும் இது மோசமான இயற்கை அனர்த்தங்களின் போதும் சோகமான சிவில் யுத்த்தின்போதும் நாட்டினை நிமிர்ந்து நிற்கக்செய்தது.
1996 உலகக்கோப்பையின் வெற்றி பொதுமக்களுக்கு நாட்டினை வித்தியாசமாக பார்க்கக்கூடிய நம்பிகையை கொடுத்தது. பயங்கரவாதத்தினையும் அரசியல் சண்டைகளையும் செயலற்று நிற்கும் படி செய்த விளையாட்டு ஒவ்வொருவரும் தமது மனதில் அன்பு கொள்வதொடு சாதாரண மக்களுக்கு அவர்களின் வாழ்வில் பெற உதவுவதன் மூலம் சிலவற்றை அளித்தது. பல்வேறுவிதமான பின்னணிகள், இனங்கள்,சமயங்களையும் கொண்ட வீரர்கள் பொதுவான சந்தோசம்,ஆர்வம், ஒவ்வொருவருக்கிடையிலான,அவர்களது தாய்நாட்டின் மீதான அன்பு என்பவற்றை பகிர்த்து இலங்கை சமுகம் எப்பிடி இருக்கவேண்டும் என்பதற்கு அமைய அணியும் அனைத்தையும் கொண்டதாக மாறியது. யுத்தத்தினை பொருட்படுத்தாது இங்கே நாங்கள் ஒன்றாக விளையாடியதோடு இலங்கை அணி தகுந்த அணியாக மாறியது.

No comments:

Post a Comment