Sunday, January 6, 2013

விடைபெறும் மிஸ்டர் கிரிக்கெட் சில நினைவுகள்



ஆவுஸ்ரேலிய அணி மிக திட்டமிட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளும் அணி தான் என்பதற்கு சிறந்த உதாரணம் ஹசி. 2004 ம் ஆண்டு காலப்பகுதியில்  மைக்கல் பவனின் ஓய்வினை தொடர்ந்து அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, ஒருநாள் போட்டியில் மட்டும் செயற்பட்ட பவனின் மாற்று வீரர் அனைத்து வித போட்டியிலும் சிறப்பாக செயற்படக்கூடிய ஒருவராக கிடைப்பார்  என்று எவருமே எதிர்பார்க்கவில்லை.  



2006 ம் ஆண்டு தொடக்கம் அப்போது VB கிண்ணப் போட்டியின் இரண்டாவது இறுதிப் போட்டி பொன்டிங்,சைமன்ட்ஸ் ஜோடியால் வெளுத்து வாங்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின்  48 வது ஓவர் முரளிதரனால் வீசப்பட்டது அப்போது தான் நான் முதன் முதலாக அவரது துடுப்பாட்டத்தை பார்த்தேன் அப்போது  டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்படும் ஒரு வீரராக மட்டும் அறிந்திருந்த நிலையில்  அவர் எதிர்கொண்ட முதல் பந்தே  சிக்ஸ்சருக்கு அனுப்பப்பட்டது. அந்த ஓவரில் மொத்தம் 21 ஓட்டங்கள் பெறப்பட முரளிதனின் மிக மோசமான பந்து வீச்சு பெறுதியாக(10-0-99-0) அந்தப் போட்டி அமைந்திருந்தது. அப்போதே இவரிடத்தில் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்து கொண்டேன்.




2010ம் ஆண்டு  பாக்கிஸ்தான் அணியுடனான T20 உலக கிண்ண அரையிறுதி போட்டி அது. கடைசி 5 ஓவர்களில் 70 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் ஹசி ஆடுகளத்தில் நுழைந்தார். ஒவ்வொரு ஓவரிலும் தேவையான் சராசரி ஓட்டப் பெறுதியை பெற்ற நிலையில் இறுதி ஓவர் சுழல் நாயகன்  சாயிட் அஜ்மல் வீச வரும் போது வெற்றி பெற  18 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது. ஓவரின் முதல் பந்தில்  மிட்சல் ஜோன்சன் ஒரு ஓட்டத்தை பெற மீதமுள்ள பந்துகளுக்கு  எந்த வித பதட்டமும் இன்றி மிக இயல்பாக விளையாடிய ஹசி 6 6 4 6 என ஒரு பந்து மீதமுள்ள நிலையில் போட்டியை முடித்து அந்தப் போட்டியில் 24 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்று ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார்.


தொடர்ந்து டெஸ்ட், T20 என அனைத்து போட்டியிலும் ஹசி தன்னை நிரூபித்திருந்தார். IPL போட்டி தொடரில்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 4வது இடத்தில் சிறப்பாக விளையாடிய ஹசி  பின்னர்  மத்தியு ஹெய்டனின் இடத்துக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அங்கும் தன்னை நிருபித்து இருந்தார். மூன்று வகையான போட்டிகளிலும் துடுப்பாட்ட சராசரி மற்றும் அடித்தாடும் வீதம் என ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இருக்க வேண்டிய அனைத்து திறமைகளையும் ஹசி தன்னகத்தே கொண்டிருந்தார். அது தவிர மிக சிறந்த ஒரு களத்தடுப்பாளராகவும் ஹசி விளங்கியிருந்தார்.


இறுதியாக இன்றைய போட்டியின்  வெற்றி ஓட்டத்தை பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அணியின் நலனே முக்கியம் என்பதை நிருபிக்கும் வகையில் ஜோன்சன் அடித்த பந்துக்கு ஓட்டத்தை பூர்த்தி செய்து தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்வை நிறைவுக்கு கொண்டு வந்த இவரது ஓய்வு நிச்சயம் அவுஸ்திரேலியா அணிக்கு பேரிழப்பாக அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.



No comments:

Post a Comment