Friday, January 9, 2015

மைத்திரியின் வெற்றியும் பின்னால் வரப்போகும் சிக்கல்களும்



ஒருவாறாக மகிந்த ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்கிறார். நாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. ஆயினும் இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறது என்பது முக்கிய கேள்வியாகும். எந்த வித அழுத்தத்தையும் பிரயோகிக்காமல் மகிந்த ஆட்சியில் இருந்து வெளியேறியமை சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மைத்திரியால் பெற்றுக்கொள்ளப் பட்ட வெற்றியானது. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத பல்வேறு சக்திகளின் கூட்டினால் உருவாகிய ஒன்றாகும். தன்னுடைய சொந்த மாவட்டமான பொலநறுவையில் கூட மைத்திரியால் 42000 வாக்குகளினால் தான் வெற்றிபெற முடிந்துள்ளது. இதே வேளை தெற்கு, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான வாக்குகளால் மகிந்த வெற்றி பெற்றுள்ளார்.


தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து மைத்திரிபாலவால் மேற்கொள்ள படவுள்ள பாராளுமன்ற கலைப்பினை தொடர்ந்து தேர்தல் இடம்பெறவுள்ளது. இதன் மூலம் இதன் போது பிரதமர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது. மகிந்த ஒருவேளை  இத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் 2020 இல் இதே பிரதமர் முறையினை கொண்டு வரவே திட்டமிட்டிருந்தார். எனவே இது தற்போது தானாகவே அமைந்துள்ளது.



பதவியை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்தும் சுதந்திரக்கட்சியின் தலைவராக தொடரவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளமையானது எதுவும் இடம்பெறலாம் என்ற எண்ணப்பாட்டை உருவாக்கியுள்ளது. தாம் தேர்தலில் தோல்வியடையவில்லை பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறும் பசில் ராஜபக்சவின் கருத்தில் இருந்தும் இது தெளிவாகிறது.எனவே பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த மீண்டும் போட்டியிட்டு வெல்ல முடியும்.

பாராளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெறும் போது எதிர்தரப்பில்  இதே கூட்டணி நீடிக்கும் என கூற முடியாது. முஸ்லீம்,தமிழ், ஜே.வி.பி. முதலிய கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கும் போது   வாக்குகள் பிரியும் அதே சமயம் அதே எண்ணிக்கையான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் போது அவர்களால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றகூடிய சூழல் உருவாக்கலாம். சுதந்திர கட்சியை மீளவும் கைப்பற்ற சந்திரிக்கவினால் இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகளும் ஏனைய கட்சி தாவல்களும் தான் இவற்றை தீர்மானிக்கும்.


எது எவ்வாறு இருப்பினும் ஒட்டு மொத்தத்தில் இத் தேர்தலின் மூலம் இலங்கையில் சர்வாதிகார ஆட்சி  ஒழிக்கப்பட்டு புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment